ஜேர்மனியில் சமீபத்தில் நடந்து முடிந்த மாகாண தேர்தல்களின் முடிவுகள், ஆளும் கூட்டணிக்கு எதிராகவும், வலதுசாரிக் கட்சிக்கு ஆதரவாகவும் அமைந்துள்ளன.
ஆளும் கூட்டணிக் கட்சி புலம்பெயர்தலுக்கு ஆதரவாக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவருகிறது. அதே நேரத்தில், புலம்பெயர்தலுக்கு எதிரான வலதுசாரிக்கட்சிக்கு பொதுமக்களின் ஆதரவு அதிகரித்துவருகிறது.
ஆக, ஒரே நேரத்தில் ஜேர்மனியில் புலம்பெயர்தலுக்கு ஆதரவும் எதிர்ப்பும் அதிகரிக்கும் ஒரு குழப்பமான சூழ்நிலை நிலவுகிறது எனலாம். வலதுசாரிக் கட்சியான Alternative for Germany (AfD) கட்சி, தனது தேர்தல் பிரச்சாரத்தில், புகலிடம் மற்றும் புலம்பெயர்தலுக்கு எதிரான கருத்துக்களைத்தான் முன்வைத்தது. புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டும் ஜேர்மனியிலேயே தங்கியிருப்பவர்களை நாடுகடத்தவேண்டும் என அக்கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
பல ஆண்டுகளாக ஜேர்மனியில் வாழும் அகதிகள் மற்றும் இஸ்லாமியர்களுக்கும் வேண்டுமென்றே அச்சத்தை உருவாக்கி வந்துள்ளது அக்கட்சி. ஜேர்மனியில், பல துறைகளில் பணியாளர் தட்டுப்பாடு நிலவும் நிலையிலும், புலம்பெயர்தலைக் கடுமையாக கட்டுப்படுத்த அக்கட்சி விரும்புகிறது.
அப்படியிருந்தும் அக்கட்சி, சமீபத்திய தேர்தல்களில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளதைப் பார்க்கும்போது, மக்களில் ஒரு தரப்பினர் அக்கட்சியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டுள்ளார்கள் என்றுதானே பொருள்?
புலம்பெயர்தலுக்கு ஆதரவு
ஆளும் கூட்டணிக் கட்சி புலம்பெயர்தலுக்கு ஆதரவாக நடவடிக்கைகள் எடுத்து வருவது அனைவரும் அறிந்ததே. அதேபோல, புகலிடக்கோரிக்கையாளர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரிக்கும் செப்டம்பருக்கும் இடையில் மட்டுமே 250,000 புகலிடக்கோரிக்கை விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இது முந்தைய ஆண்டைவிட அதிகம்.
ஆக, ஆளும் கூட்டணிக் கட்சிகள் புலம்பெயர்தலை ஆதரிக்கின்றன. மக்களோ, புலம்பெயர்தலுக்கு எதிரான எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவை அதிகரித்து வருகிறார்கள். மொத்தத்தில், இப்போதைக்கு ஜேர்மனியில் புலம்பெயர்தல் தொடர்பில் ஒரு குழப்பமான சூழலே காணப்படுகிறது.