மூன்றுநாள் விஜயமாக பிரித்தானிய அமைச்சர் அன்னே இலங்கை வருகை

76 0

பிரித்தானியாவின் இந்தோ-பசுபிக் பிராந்தியத்திற்கான பிரித்தானிய வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அமைச்சர் அன்னே மேரி ட்ரெவெலியன் மூன்று நாட்கள் உத்தியோக பூர்வ விஜயத்தினை மேற்கொண்டு இலங்கையை வந்தடைந்துள்ளார்.

அவரை, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் வரவேற்றதோடு கலந்துரையாடல்களிலும் ஈடுபட்டார். இதன்போது இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்று பற்றிக்கும் கலந்துகொண்டார்.

 

அதனைத்தொடர்ந்து, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியைச் சந்தித்த அவர், பொருளாதா மீட்சிக்கான பதையில் இலங்கை முன்னெடுத்துவரும் செயற்பாடுகள், கடன் மறுசீரமைப்புக்கான முனைப்புக்கள், உண்மை மற்றும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கான செயற்பாடுகள் இந்து சமுத்திரத்தில் வர்த்தகம், சக்திப் பரிமாற்றத்துக்கான திறந்த மற்றும் சுயாதீனத் தன்மையை பேணுதல், ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்கள் மற்றும் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான முனைப்புக்கள், உலக வங்கியின் உதவித்திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கியமான விடயங்கள் சம்பந்தமாக பரந்துபட்ட அளவில் கலந்துரையாடியதாக அமைச்சர் அன்னே மேரி ட்ரெவெலியன் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

 

 

 

அமைச்சர் அன்னே மேரி ட்ரெவெலியனின் இந்த விஜயமானது, பிரித்தானியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர உறவுகளின் 75ஆவது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் அமைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு வருகை தந்துள்ள அவர் இன்று ஆரம்பமாகும் இந்து சமுத்திர எல்லை நாடுகளின் சங்கத்தின் 23ஆவது அமைச்சர் மட்ட கூட்டத்தில்  பங்கேற்கவுள்ளார். அத்துடன் அவர் இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கான பிரித்தானியாவின் அர்ப்பணிப்பு மற்றும் ஒத்துழைப்பை வலியுறுத்தவுள்ளார்.

அத்துடன், காலநிலை மாற்றம், சுற்றுசூழல் உள்ளிட்ட பிரச்சனைகள் தொடர்பாக இந்து சமுத்திர எல்லை நாடுகளின் சங்கத்தின் வகிபாகத்தினை வலியுறுத்தவுள்ளதோடு, இலங்கையின் சுற்றுச்சூழல் முன்முயற்சிகளுக்கு, குறிப்பாக பல்லுயிர் நோக்கங்கள் மற்றும் கிளாஸ்கோ ஒப்பந்தம் தொடர்பான விடயங்களில் பிரித்தானியாவின் ஆதரவினையும், ஒத்துழைப்பையும் வெளிப்படுத்தவுள்ளார்.

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் மேம்பட்ட பாதுகாப்பு மற்றும் கூட்டு காலநிலை இலக்குகள் அடைவதற்கான பகிரப்பட்ட நோக்கங்களை முன்னேற்றுவதில் இந்து சமுத்திர எல்லை நாடுகளின் சங்கத்தின் பங்களிப்பினையும் வலியுறுத்தவுள்ளார்.

அமைச்சர் ட்ரெவெலியன் கொழும்பில் தங்கியிருக்கும் காலத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி உட்பட அரசாங்கத்தின் முக்கிய உறுப்பினர்களுடன் இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார்.

இந்த கலந்துரையாடல்கள் காலநிலைமாற்றத்துக்கான நிதி, பசுமை வளர்ச்சி, இருதரப்பு வர்த்தகம், மனித உரிமைகள், நீதி சீர்திருத்தம் மற்றும் இங்கிலாந்துக்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை உள்ளடக்கியதாக அமையவுள்ளது. அத்துடன்  வர்த்தக மற்றும் சிவில் சமூகத்தின் பிரதிநிதிகளுடனும் சந்திப்புகளை நடத்துவார்.

அதனைத்தொடர்ந்து நாளை 11ஆம் திகதி வடக்குக்கான விஜயத்தினை மேற்கொள்ளும் அவர் ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் உள்ளுர் வர்த்தகத் தலைவர்களை சந்திக்கவுள்ளார். வடக்கில் உள்ள தமிழ் பிரதிநிதிகளை ஒன்றாக அழைத்துள்ள அவர் தனியார் விடுதியில் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார்.

மேலும், பிரித்தானியாவின் மோதல், பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை நிதியத்தின்  ஆதரவுடன் முகமாலையில் முன்னெடுக்கப்படும் கண்ணிவெடி அகற்றும் தளத்திற்கும் அவர் விஜயம் செய்யவுள்ளதோடு அந்த விஜயமானது, இலங்கையில் சமாதானத்தைக் கட்டியெழுப்புவதற்கும் கண்ணிவெடி அகற்றும் முயற்சிகளுக்கும் பிரித்தானியாவின் அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.