அமெரிக்காவின் அதிபராக நான் பதவி ஏற்றால் நாட்டில் சட்டம்-ஒழுங்கின் அடிப்படையிலான நல்லாட்சி நடைபெறும். அமைதியும், பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படும். சட்டவிரோத குடியேற்றமும், தீவிரவாதமும் ஒழிக்கப்படும் என குடியரசுக் கட்சி சார்பாக அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் வாக்குறுதி அளித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது. இதனையடுத்து புதிய அதிபரை தேர்ந்தெடுக்க வரும் நவம்பர் மாதம் 8-ம் தேதி தேர்தல் நடக்கிறது.
இதில் களம்காண உள்ள குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான பிரைமரி தேர்தல்கள் பல்வேறு மாகாணங்களில் நடந்து வந்தன. இதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக, முன்னாள் அதிபர் கிளிண்டனின் மனைவியும், முன்னாள் வெளியுறவு அமைச்சருமான ஹிலாரி கிளிண்டன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் பதவி வேட்பாளராக ஜனநாயக கட்சியின் சார்பில் அமோக ஆதரவை பெற்றுள்ள ஹிலாரி கிளிண்டனுக்கு அதிபர் பராக் ஒபாமா வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கிளிவ்லேண்ட் பகுதியில் நடைபெற்ற குடியரசு கட்சியின் தேசிய பிரதிநிதிகள் மாநாட்டில் அக்கட்சியின் அதிகாரபூர்வ அதிபர் வேட்பாளராக பிரபல தொழிலதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவிக்கப்பட்டார். தன்னை அதிபர் வேட்பாளராக தேர்ந்தெடுத்தவர்களுக்கு நன்றி தெரிவித்து இன்று கிளிவ்லேண்ட் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் டொனால்ட் டிரம்ப் பேசியதாவது:-
அமெரிக்காவை முன்னிலைப்படுத்த தவறும் அரசியல்வாதிகளால் நாம் வழிநடத்தப்படும்வரை மற்ற நாடுகள் நமக்குண்டான மரியாதையை அளிக்கும் என்பதை நாம் எதிர்பார்க்க முடியாது. எனவே, உலகமயம் என்பதைவிட அமெரிக்கமயம் என்பதே எனது முக்கிய கொள்கையாக இருக்கும்.
நம்மை நிறம் மற்றும் இனத்தின் அடையாளத்தால் வேறுபடுத்தியதன் மூலம் நமது அதிபர் (ஒபாமா) இந்த நாட்டில் அனைவருக்கும் அபாயமான ஒரு சூழலை ஏற்படுத்தி விட்டார். இன்று நமது நாட்டை ஆக்கிரமித்துள்ள குற்றங்களும், வன்முறையும் வெகு சீக்கிரம் முடிவுக்கு வரும். வெள்ளை மாளிகைக்கான இந்த பந்தயத்தில் நான் சட்டம்-ஒழுங்கு வேட்பாளராக போட்டியிடுகிறேன்.
இந்த தேர்தலில் நான் வெற்றிபெற்று 20-1-2017 அன்று அமெரிக்காவின் அதிபராக பதவி ஏற்கும் நாளில் இருந்து நாட்டில் சட்டம்-ஒழுங்கின் அடிப்படையிலான நல்லாட்சி நடைபெறும். அமைதியும், பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படும். சட்டவிரோத குடியேற்றமும், தீவிரவாதமும் ஒழிக்கப்படும்.
வெளிநாட்டவர்களின் குடியேற்றத்தால் ஏற்பட்டுவரும் பாதுகாப்பற்றத்தன்மை குறித்து அமெரிக்க மக்களின் கவலை தொடர்பாக செவிசாய்க்க மறுத்த ஒவ்வொரு அரசியல்வாதியும் நான் சொல்வதை நன்றாக கவனிக்க வேண்டும். நான் அதிபராக பதவி ஏற்றபின்னர் 21-1-2017 முதல் அமெரிக்க சட்டதிட்டங்கள் அனைத்தும் அமலில் உள்ள ஒரு நாட்டில் இருக்கிறோம் என்ற நிம்மதியுடன் மக்கள் தூக்கத்தில் இருந்து கண்விழிக்கலாம்.
வெளிநாட்டவர்கள் குடியேற்றம் தொடர்பான எனது திட்டங்கள் ஹிலாரி கிளிண்டனின் ஆபத்தான திட்டங்களுக்கு எதிர்மாறானவை ஆகும். எல்லைதாண்டி நமது நாட்டுக்குள் நுழையும் சட்டமீறலான குடியேற்றங்கள் முழுவீச்சில் தடுத்து நிறுத்தப்படும்.
தங்களது விசாக்காலம் முடிந்தும் இங்கு தங்கியிருப்பவர்கள் விவகாரத்தில் நமது சட்டங்கள் தமக்குண்டான மரியாதையை பெறும். தீவிரவாதத்துடன் தொடர்புடைய நாடுகளில் இருந்துவரும் குடியேற்றங்களை உடனடியாக ரத்து செய்யும் புதிய விதிமுறைகள் கொண்ட செயல்திட்டங்கள் உருவாக்கப்படும்.
வன்முறை, வெறுப்புணர்வு, அடக்குமுறை ஆகியவற்றை தூண்டி விடுபவர்களை ஒருபோதும் அமெரிக்காவுக்குள் அனுமதிக்க மாட்டோம். அவர்கள் இந்த நாட்டுக்கு தேவை இல்லை.
அமெரிக்காவை தீவிரவாத அச்சுறுத்தலில் இருந்து பாதுகாக்க மூன்றம்ச சிறப்பு செயல்திட்டம் உருவாக்கப்படும். உலகிலேயே மிகவும் சிறப்பான முறையில் உளவு தகவல்களை சேகரிக்கும் உளவுப்படையை ஏற்படுத்த வேண்டும். ஐ.எஸ். தீவிரவாதிகளின் காட்டுமிராண்டித்தனத்தை அமெரிக்கா முறியடிக்கும்.
தேசத்தை கட்டமைப்பது, ஆட்சியை மாற்றுவது என்று கடந்தகாலத்தில் ஈராக், லிபியா, எகிப்து, சிரியா போன்ற நாடுகளில் ஹிலாரி கிளிண்டனால் திணிக்கப்பட்ட கொள்கைகளை நாம் கைவிட வேண்டும். மாறாக, ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழித்தே தீர வேண்டும் என்ற இலக்குடன் உள்ள இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்து நாம் செயலாற்ற வேண்டும்.