தமிழீழப்பெண்கள் எழுச்சி நாள் ஒக்டோபர் 10ஐ முன்னிட்டு டென்மார்க் மகளிர் அமைப்பினரால் விடுக்கப்படும் அறிக்கை.

255 0

தமிழீழ விடுதலைப்போராட்டம் என்பது மண் விடுதலையை மட்டும் குறியீடு செய்வதல்ல. அது காலங்காலமாக எமது மண்ணில் ஆழவேரூன்றிய மூடக்கொள்கைகளையும், சமுதாயச்சிறைகளையும் தகர்த்து முற்போக்கான கொள்கைகளை வரித்து, அறிவார்ந்த சமுதாயம் ஒன்றை உருவாக்கும் உயரிய நோக்கம் கொண்டது. இதன் வெளிப்பாடாகத் தோற்றம் பெற்றதே தமிழீழப்பெண்களின் எழுச்சி.

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் வழிகாட்டலிலே உருவாகி எமது மண்ணிலே அரும்பணி புரிந்து மாபெரும் தற்கொடையாய் தம்முயிர்களை ஈர்ந்த போராளிகளில் முதல் பெண்போராளியாக வீரகாவியம் படைத்த இரண்டாம் லெப்டினன் மாலதி அவர்கள் வீரச்சாவைத் தனதாக்கிக் கொண்ட நாளையே நாம் தமிழீழப்பெண்கள் எழுச்சி நாளாகக் கொள்கிறோம்.

உலகப் பெண்களுக்கே வழிகாட்டியாக உயர்ந்து நின்ற எமது பெண்கள் எமது தேசியத் தலைவரின் வழிகாட்டலில் அனைத்து துறைகளிலும் தம்மை வளர்த்து, தமிழ் தேசிய உணர்வுகளையும் கட்டியெழுப்பி, பெண் எழுச்சிக்கு வித்திட்டவர்கள். ஆனால் இன்று தமிழீழத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துச் செல்கின்றன. சமூகக்குழப்பங்களை உருவாக்கி ஆளுமை சிதைந்த அடிமைத்தன வாழ்வுக்கே பெண்ணினத்தை வழிநடத்திச் செல்கின்றார்கள்.

2009ம் ஆண்டு ஆயுத யுத்தம் மௌனித்தது. அதன் பின் பாதுகாப்பு என்ற போர்வையில் சிங்கள இராணுவம் சூழ்ந்திருக்க, கட்டிக்காத்த எம்மின அடையாளங்கள் சீரழிக்கப்படுகின்றன. கலாச்சார சீர்கேடுகள் தோற்றம் பெற்று அதற்கான விதைகள் விதைக்கப்படுகின்றன. பிஞ்சுகள் முகத்தில் போதையின் வடிவம், வீதிக்கு வீதி மதுக்கடைகள், மறைமுகப் போதைப் பொருள் விற்பனை, பிள்ளைகள் சீரழிப்பு இவ்வாறு பல வடிவங்களில் இந்தச் சீரழிப்பு இடம்பெறுகின்றது. இது மட்டுமல்லாமல் தமிழர்களின் பூர்வீக நிலங்களை அபகரித்து பௌத்த மயமாக்கல் நடைபெறுகின்றது.

காணாமல் ஆக்கப்பட்டோர்களின் உறவுகள் தொடர் போராட்டங்களை நடாத்தி வருகிறார்கள். அவர்களுக்கான நீதி இன்னும் கிடைக்கவில்லை. தமது பிள்ளைகளை காணாது தேடியலைந்த பெற்றோர்கள் எத்தனையோ பேர் இன்று உயிரிழந்து விட்டனர். எனவே இவர்களுக்கான விரைவான தீர்வொன்றை சர்வதேசத்திடம் எதிர்பார்த்து நிற்கின்றோம். தமிழ் மக்கள் மீது சிங்கள அரசினால் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் இனஅழிப்பிற்கு அவர்களிடமே நீதியினை எதிர்பார்ப்பது நடைமுறைச் சாத்தியமற்ற விடயமாகும். இதற்கு சிறந்த உதாரணமாக அண்மையில் சிங்கள அரசின் நீதித்துறையின் நீதிபதியாகப் பணியாற்றிய திரு. சரவணராசா அவர்கள் புத்த பிக்குகளால் நீதிமன்ற தீர்ப்புகளையும் மீறி அடாவடித்தனமாக மேற்கொள்ளப்படும் பௌத்தமயமாக்கலிற்கு எதிராக கூறப்பட்ட தீர்ப்புகளால் அவரே தாயகத்தை விட்டு வெளியேறினார். இவருக்கு சிங்கள புலனாய்வாளர்களால் தொடர்ச்சியாக கொடுக்கப்பட்ட உயிர் அச்சுறுத்தலினாலேயே வெளிநாட்டில் அரசியல் தஞ்சம் கோரவேண்டிய நிலமை ஏற்பட்டது. இது சிங்கள அரசால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழீழத் தேசத்தில் தனிமனிதனிற்கோ அல்லது தமிழினத்திற்கோ நீதி கிடைக்காது என்பதற்கான சிறந்த உதாரணமாகும்.

எமது உயிரிலும் மேலான தமிழீழ மண்ணை மீட்பதற்காகவும் ஈழத்தமிழர்களின் விடுதலையை வென்றெடுப்பதற்காகவும் வீறு கொண்டெழுந்து போராடி எமது மண்ணில் விதைகளாக வீழ்ந்த எமது வீராங்கனைகள் ஆயிரம் ஆயிரமாய் எமது உள்ளக் கமலங்களிலே உன்னதமான இடத்தில் வீற்றிருக்கிறார்கள். இவர்களுக்கு இன்று சுடரேற்றி வணக்கம் செலுத்துவதற்கு கூட மக்களிற்கு உரிமை இல்லை. கடந்த மாதம் தியாக தீபம் திலீபனின் ஊர்திப்பவனி சிங்கள அரசின் கைக்கூலிகளால் சேதமாக்கப்பட்டது.

இது ஒரு தனி மனிதனின் அடிப்படை உரிமையை மதிக்காமல் சிங்கள அரசு தமிழ் மக்கள் மீது அரச அடக்கு முறையை பாவித்து, தொடர்ந்தும் இன அழிப்பைச் செய்கின்றது. இன்றைய நாளில் இதை வன்மையாக கண்டிக்கின்றோம்.
உலகில் நாம் எங்கு வாழ்ந்தாலும், கல்வியாலும், பொருளாதார நிலையாலும், உயர்பதவிகளாலும் நாம் எவ்வளவு தான் உயரமாகப் பறந்தாலும் நாம் ஈழத்தழிழர் என்பதை மறந்து விட முடியாது, மறந்துவிடக் கூடாது.

வாருங்கள்! பேதங்களை மறந்து எல்லோரும் ஓரணியாகத் திரள்வோம்! எமது அடையாளமாக தாயகத்தில் வாழும் எமது இனச் சகோதரிகளுக்கு உறுதுணையாக உழைப்போம்.
நன்றி

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”
மகளிர் அமைப்பு டென்மார்க்