காலநிலை மாற்றம், நாடு கடந்த குற்றச்செயல்களை நிவர்த்தி செய்ய இருநாடுகளும் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும்

117 0
காலநிலை மாற்றம் மற்றும் நாடு கடந்த குற்றச்செயல்கள் போன்ற பொதுவான சவால்களை நிவர்த்தி செய்வதற்கு நாம் எவ்வாறு ஒருங்கிணைந்து செயற்பட முடியும் என்பது குறித்து நான் எனது இலங்கைச் சகாக்களுடன் கலந்துரையாட இருக்கின்றேன் என அவுஸ்திரேலிய வெளிவிவகார உதவி அமைச்சர் டிம் வொட்ஸ் தெரிவித்தார்.

இது குறித்து அவுஸ்திரேலிய வெளிவிவகார உதவி அமைச்சர் டிம் வொட்ஸ் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தி அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அவுஸ்திரேலியாவின் ஒரு முக்கிய பங்காளியாக இருக்கும் இலங்கைக்கு நான் இன்று பயணம் செய்கின்றேன்.

அவுஸ்திரேலியாவின் சுபீட்சமும் பாதுகாப்பும் இந்து சமுத்திரத்துடன் பின்னிப்பிணைந்துள்ளன.

இப் பிராந்தியத்தின் நாடுகள் எம்முடன் ஒத்துழைக்கவும் வணிகம் செய்யவும் வளர்ச்சியடையவும் தக்க அமைதியான, நிலையான, செழிப்பான ஓர் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் எமக்கு வலுவான ஆர்வம் உள்ளது.

நான் இலங்கையில் தங்கியிருக்கும்போது இந்துசமுத்திர விளிம்பு நாடுகள் சங்கத்தின் (IORA) அமைச்சர்கள் மன்றம் நடத்தும் 23ஆவது கூட்டத்தில் அவுஸ்திரேலியாவைப் பிரதிநிதித்துவம் செய்வேன்.

கடல்சார் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு, நீலப் பொருளாதாரம் (கடல் வளங்களை பேண்தகு முறையில் பராமரித்தல்), காலநிலை மாற்றம், இந்தோ- பசிபிக் மீது IORA செலுத்தும் கண்ணோட்டம் என்பன குறித்து நாம் கலந்துரையாடுவோம்.

இலங்கை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான IORA தலைமைப் பதவியை இக் கூட்டத்தில் பொறுப்பேற்றுக்கொள்ளும். தலைமைப் பதவியை வகிக்கும் காலம் முழுவதும் இலங்கைக்கு உதவ அவுஸ்திரேலியா ஆவலாயிருக்கின்றது.

அவுஸ்திரேலியாவும் இலங்கையும் வியாபார, கல்வி, விளையாட்டு போன்ற துறைகளில் நீடித்திருக்கும் உறவுகளைப் பகிர்ந்துகொள்கின்றன.

நவீன அவுஸ்திரேலியாவின் உயிர்த்துடிப்புக்கு பங்களிக்கும் இலங்கைப் பாரம்பரியத்தைக் கொண்ட 130,000 இற்கும் மேற்பட்ட மக்களுடன், நெருக்கமான தொடர்புகளையும் இவ்விரு நாடுகளும் பகிர்ந்துகொள்கின்றன.

விளையாட்டுத் துறையில் ஒத்துழைப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தைப் புதுப்பிக்க நான் ஆவலாயிருக்கின்றேன். விளையாட்டுகள் எம்இரு நாடுகளையும் பிணைக்கும் ஒரு மகத்தான பிணைப்பாகும்.

புதுப்பிக்கப்பட்ட வர்த்தக மற்றும் முதலீட்டுக் கட்டமைப்பு உடன்பாடு கைச்சாத்திடப்படுவதன் மூலம் இலங்கையுடனான எமது வளர்ந்துவரும் பொருளாதார உறவுகள் மேலும் மேம்படும். இது இலங்கையின் பொருளாதார மீட்சிக்கும் உதவியாக இருக்கும்.

விவசாயம், மீன்வளர்ப்பு, சுற்றுலா போன்ற துறைகளில் இலங்கையின் அனைத்து பரிமாணங்களையும் உள்ளடக்கும் பொருளாதார வளர்ச்சிக்கு எமது அபிவிருத்தித் திட்டம் உதவுகின்றது.

காலநிலை மாற்றம், நாடு கடந்த குற்றச்செயல்கள் போன்ற பொதுவான சவால்களை நிவர்த்தி செய்வதற்கு நாம் எவ்வாறு ஒருங்கிணைந்து செயற்பட முடியும் என்பது பற்றியும் நான் எனது இலங்கைச் சகாக்களுடன் கலந்துரையாட இருக்கின்றேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.