இலங்கையின் பிரபல மற்றும் வெளிநாட்டு பிரபல குற்றக் கும்பல்களின் தலைவர்களின் பெயர்களைக் பயன்படுத்தி தொலைபேசி அழைப்புகள் மூலம் கொலை மிரட்டல் விடுத்து கட்டுநாயக்க பிரதேசத்தில் உள்ள பிரபல வர்த்தகர்களிடம் பணம் பறிக்க முயற்சித்த ஒருவர் கட்டுநாயக்க பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவால் நேற்று திங்கட்கிழமை (09) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 42 வயதுடைய மாத்தறை, திஹா கொட, பதுவிட்ட பகுதியை சேர்ந்த முன்னாள் இராணுவ வீரர் ஆவார்.
இவர் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தை சுற்றியுள்ள விடுதியில் தற்காலிகமாக வசித்து வந்துள்ளார்.
குறித்த நபர் எவ்வித குற்றக்கும்பல்களுடனும் தொடர்புடையவர் இல்லை என்று பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்நிலையில், பிரபல வானொலி நிகழ்ச்சியில் குற்றத்தை வெளிப்படுத்தும் நிகழ்ச்சியை கேட்டதன் மூலம் தான் இதைச் செய்யத் தூண்டப்பட்டதாக பொலிஸாரிடம் கைதுசெய்யப்பட்ட நபர் தெரிவித்துள்ளார்.
கைதுசெய்யப்பட்ட நபரிடமிருந்து வர்த்தகர்களுடன் தொடர்புகொள்ள பயன்படுத்திய கையடக்கத் தொலைபேசி மற்றும் சிம் அட்டைகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.