அரசின் வருவாய் அதிகரித்தும்போக்குவரத்து தொழிலாளர்களுக்காக செலவிட அரசுக்கு மனமில்லை என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்துத் தொழிலாளர்களின் 15-வது ஊதிய உயர்வு ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும். போக்குவரத்துத் துறையைதனியார் மயமாக்கும் உள்நோக்கத்தோடு டெண்டர் முறையில் ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு ஆட்களைத் தேர்வு செய்யும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்பனஉள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அதிமுகவின் அண்ணா தொழிற்சங்கப் பேரவை சார்பில் சென்னை, பல்லவன் இல்லம் முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசுக்குஎதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. பின்னர் செய்தியாளர்களிடம் ஜெயக்குமார் கூறியதாவது: திமுக அரசு பொறுப்பேற்று 29 மாத கால ஆட்சியில் தமிழ்நாடு போராட்டக் களமாக மாறிவிட்டது. ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், விவசாயிகள், நெசவாளர்கள், மீனவர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்பட அனைவருமே இன்று போராடிக்கொண்டு இருக்கின்றனர்.
தேர்தல் நேரத்தில் 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு, ஒருசிலவற்றை மட்டும் நிறைவேற்றிவிட்டு, 100 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக திமுக அரசு தவறான தகவலை கூறி வருகிறது.