தெர்மாகோலால் அணைகள் மூடல்: அமைச்சர் பதிலால் சிரிப்பலை

68 0

 அணைகளில் உள்ள தண்ணீர் காலியாகாமல் இருக்க தெர்மாகோல் கொண்டு மூடிவைத்துள்ளோம் என அமைச்சர் துரைமுருகன் கூறியதால் பேரவையில் சிரிப்பலை எழுந்தது.

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது அதிமுக உறுப்பினர் செல்லூர் ராஜு, ‘‘மதுரை மாவட்ட குடிநீருக்காக முல்லை பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் கொண்டுவரும் திட்டம் அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்டது. அத்திட்டப் பணிகள் மந்தமாக நடைபெறுகிறது. அதை விரைவுபடுத்த வேண்டும். மதுரை மாவட்ட மக்களுக்கு கழிவுநீர் கலக்காத நல்ல நீரை வழங்க வேண்டும்’’ என்றார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் கே.என்.நேரு, ‘‘தண்ணீர் கொண்டு வருவதற்கான பணிகள் நடைபெற்றாலும், கிணறுகள் தோண்டுவதற்கான அனுமதி பெறப்படவில்லை. மேலும், குழாய் பதிக்கும் பணிகளும் முடிக்கப்படவில்லை. தற்போது 15 கி.மீ. தொலைவுக்கு குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் மதுரைக்கு தினசரி 160 மில்லியன் லிட்டர் சுத்தமான குடிநீர் வழங்கப்படும்’’ என்றார்.

அப்போது அமைச்சர் துரைமுருகன் எழுந்து, ‘‘நிச்சயம் தண்ணீர் கிடைக்கும். அணைகளில் உள்ள தண்ணீர் காலியாகாமல் இருக்க தெர்மாகோல் கொண்டு மூடிவைத்துள்ளோம்’’ என கூறினார். இதைக் கேட்டதும் பேரவையில் இருந்த முதல்வர் உள்ளிட்ட அனைவரும் சிரித்தனர்.