காசா பகுதியை தனது முழு கட்டுப்பாட்டில் இஸ்ரேல் ராணுவம் கொண்டு வந்துள்ளதாக அறிவித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேல், பாலஸ்தீன எல்லையில் பதற்றம் நீடிப்பதால் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த சனிக்கிழமை முதல் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகள், இஸ்ரேல் மீது நடத்தி வரும் கடும் தாக்குதல்களால் இஸ்ரேல் தரப்பில் இதுவரை 700 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த சனிக்கிழமை மட்டும் இஸ்ரேல் மீது 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை ஒரே நேரத்தில் வீசி, தரை வழியாகவும் மற்றும் வான் வழியாகவும் பல வழி தாக்குதலை ஹமாஸ் தீவிரவாதிகள் நடத்தினர்.
அதேபோல், ஹமாஸ் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் வான்வழித் தாக்குதல்களால் காசா பகுதியில் வாழ்ந்து வந்த பாலஸ்தீன நாட்டு மக்கள் சுமார் 500 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருதரப்பிலும் ஆயிரக்கணக்கான மக்கள் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில், இஸ்ரேலின் தெற்குப்பகுதியின் பல இடங்களில் ஹமாஸ் தீவிரவாதிகளுடன் மோதல் தொடர்ந்து வரும் நிலையில், காசாவில் ஹமாஸ் தீவிரவாதிகளின் 500 இலக்குகளில் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இந்தப் போர் காரணமாக, பாலஸ்தீன பகுதிகளில் இருந்து இதுவரை சுமார் 1.20 லட்சம் பொதுமக்கள் வெளியேறியுள்ளனர்.
இந்நிலையில், காசா மீது பெரும் தாக்குதலை, இஸ்ரேல் படைகள் நேற்று மேற்கொண்டன. இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து காசா பகுதி முழுவதையும் தனது கட்டுப்பாட்டில் நேற்று இஸ்ரேல் ராணுவம் கொண்டு வந்துள்ளது.
இதுகுறித்து இஸ்ரேல் நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் யோவ் கேலன்ட் கூறியதாவது:
காசா பகுதி, தெற்கு எல்லையோரப் பகுதிகளில் நாங்கள் இன்று பெரும் தாக்குதலை நடத்தினோம். இதன்மூலம் காசா பகுதி முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. அங்கு எரிபொருள், உணவு, மின்சார வசதி முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. அங்கு நாங்கள் மனிதர்களோடு போரிடவில்லை. மிருகங்களோடு போரிடுகிறோம். அதற்கு ஏற்றவாறு நாங்கள் செயல்படுகிறோம். காசா முழுமையாக எங்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது என்பதை இப்போது அறிவிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
இஸ்ரேல் நாட்டின் பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி கூறும்போது, “காசா தெற்கு எல்லைப் பகுதியில் பெரும்பாலானவற்றை நாங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டுள்ளோம். அந்தப் பகுதியில் நடமாடிய பெரும்பாலான தீவிரவாதிகளை கொன்று விட்டோம். இருந்தபோதும் அப்பகுதியில் மேலும் சில தீவிரவாதிகள் இருக்கலாம் என எண்ணுகிறோம்.
அப்பகுதியில் இருந்த மக்களை அப்புறப்படுத்தி பாதுகாப்பான இடத்துக்கு மாற்றிவிட்டோம். இதைத் தொடர்ந்து அங்கு தீவிரவாதிகள் மறைந்திருக்கின்றனரா என சோதனையிட்டு வருகிறோம். மேலும் அப்பகுதியில் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறோம்” என்றார். இஸ்ரேலின் தெற்குப்பகுதியின் பல இடங்களில் ஹமாஸ் தீவிரவாதிகளுடன் மோதல் தொடர்ந்து வரும் நிலையில், காசா எல்லைப் பகுதியில் ராணுவ வீரர்களை இஸ்ரேல் ராணுவம் நிறுத்தியுள்ளது. ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் இங்கு நிறுத்தப்பட்டு கண்காணிப்புப் பணியிலும், தாக்குதல் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் ஒரு லட்சம் ராணுவ வீரர்கள் அங்கு நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இதனால் இஸ்ரேல், பாலஸ்தீன எல்லையில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.
இஸ்ரேல் விரையும் அமெரிக்க கப்பல்: பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதலை எதிர்கொள்ள இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் போர்க்கப்பல் மத்திய தரைக்கடல் பகுதியில் இருந்து இஸ்ரேலுக்கு விரைந்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க ராணுவ அதிகாரிகள் கூறும்போது, ‘‘அமெரிக்க கடற்படையைச் சேர்ந்த போர்டு கேரியர் கப்பல் இஸ்ரேலுக்குச் செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த போர் விமான கப்பலில் 5 ஆயிரம் வீரர்கள் உள்ளனர். இந்தக் கப்பலில் உள்ள போர் விமானங்கள் எந்தவொரு சூழ்நிலையையும் சமாளிக்கும் திறன் வாய்ந்தவை. தற்போது இந்தக் கப்பல் மத்திய தரைக்கடலில் இருந்து இஸ்ரேல் நோக்கி விரைந்துள்ளது’’ என்றனர்.
யாருக்கு சொந்தம்? இஸ்ரேல் – பாலஸ்தீனம் ஆகிய நாடுகளுக்கு இடைப்பட்ட எல்லைப் பகுதியாக காசா அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் ஹமாஸ் என்ற தீவிரவாதிகளின் படை தன்னாட்சி செய்து வருகிறது. இதற்கு பாலஸ்தீனம் முழு ஆதரவு தெரிவித்துள்ளது. இதனால் அவ்வப்போது காசா எல்லையைக் கைப்பற்ற இஸ்ரேல் பலமுறை தாக்குதல்களை நடத்தியுள்ளது.