நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்தில் மனித உரிமையை மீறக்கூடிய எந்த விடயங்களும் இல்லை

111 0

நிகழ்நிலை காப்பு சட்டமூலம் சமூக வலைத்தளங்களை ஒழுங்குபடுத்துவதற்கான சட்டமே தவிர ஊடகங்களை அடக்குவதற்கு கொண்டுவரப்படுவதல்ல. அத்துடன் மனித உரிமை மீறக்கூடிய எந்த விடயங்களும் அதில் இல்லை என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ரங்கே பண்டார தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் திங்கட்கிழமை (09) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நிகழ்நிலை காப்பு சட்ட மூலத்தை கொண்டுவந்து ரணில் விக்ரமசிங்க மக்களின் மனித உரிமையை மீறி இருப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க உட்பட எதிர்க்கட்சியை சேர்ந்த பலரும் பொய் பிரசாரம் செய்துவருகின்றனர். ஆனால் வீழ்ச்சியடைந்திருந்த இந்த நாட்டை ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்காமல் இருந்திருந்தால் இவர்கள் யாருக்கும் நாட்டில் இருப்பதற்கு முடியாமல் இருந்திருக்கும்.

அத்துடன் நாட்டின் எந்த நடவடிக்கையை முன்னெடுத்தாலும் அது முறையாக ஒழுங்கமைக்கப்படவேண்டும். போக்குவரத்து துறையை எடுத்துக்கொண்டால் வீதியில் வாகனம் செலுத்துவதற்கு என ஒரு ஒழுங்கமைப்பு இல்லாவிட்டால் வீதியில் வாகனங்களுக்கு பாதுகாப்பாக பயணிக்க முடியாமல் இருந்திருக்கும். அதனால்தான் போக்குவரத்து சட்டம் அமுல்படுத்தப்பட்டிருக்கிறது. இதன் மூலம் வீதி விபத்துக்கள் கட்டுப்படுத்த முடியுமாக இருக்கிறது.

அதன் பிரகாரம் நிகழ்நிலை காப்பு சட்டமூலம் சமூகவலைத்தளங்களை ஒழுங்குபடுத்துவதற்கே கொண்டுவரப்படுகிறது. இதன் மூலம் சமூகவலைத்தளங்களின் மூலம் ஏற்படுகின்ற குற்றச்செயல்களை கட்டுப்படுத்த முடியுமாகிறது. மக்களின் உரிமைகளை பாதுகாக்கவே இந்த சட்டமூலலத்தை கொண்டுவர அரசாங்கம் தீர்மானித்திருக்கிறது.

இதன் மூலம் ஊடகங்களுக்கு தடைகளை ஏற்படுத்தவோ சமூகவலைத்தளங்களை பயன்படுத்துவதை தடுப்பதற்கோ எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுவதில்லை. சமூகவலைத்தளங்களில் பிரசுரிக்கப்படும் செய்திகளுக்கு வகைபொறுப்பு ஏற்படுகிறது.

அதனால் நிகழ்நிலை காப்பு சட்டமூலம் ஊ்டாக சமூகவலைத்தளங்களை ஒழுங்குபடுத்துவதே தவிர ஊடகங்களை அடக்குவதற்காக கொண்டுவரப்பட்டதல்ல. அவ்வாறான எந்த விடயங்களும் அதில் இல்லை. அதேபோன்று மனித உரிமை மீறக்கூடிய எந்த விடயங்களும்  அதில் இல்லை என்றார்.