இலங்கையில் தற்போது நீதி மரணித்துவிட்டதாகவே உணரமுடிவதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
தற்போது நாட்டில் போதைப் பொருட்கள் பல்கிப்பெருகியுள்ளதுடன், சட்டவிரோத செயற்பாடுகளும் அதிகரித்துக் காணப்படுகின்ற நிலையில், நீதிபதி சரவணராஜா உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு, அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு இந்த நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ள நிலைமை இந்த நாட்டில் நீதி மரணித்ததற்கு ஒப்பானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் முன்பாக 09.10.2023 இன்று, நீதிபதி சரவணராஜாவிற்கு நீதி கோரி இடம்பெற்ற கவனயீர்ப்பு நடவடிக்கையில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
நீதிபதி சரவணராஜாமீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டமை மற்றும், உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமைக்கு நீதிகோரி தொடர்ந்தும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
அந்தவகையில் ஒக்ரோபர் (09)ஆம் திகதி சட்டத்தரணிகள் ஒன்றிணைந்து கொழும்பில் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருப்பதுடன், குறித்த தினத்தில் முல்லைத்தீவு மாவட்ட இளைஞர்களாலும் கவனயீர்ப்பு நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு கவனயீர்ப்பு நடவடிக்கைக்கென முல்லைத்தீவு மாவட்ட இளைஞர்கள் அழைப்பு விடுத்திருந்த நிலையில், புலனாய்வாளர்கள் பல வீடுகளுக்குச் சென்று அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.
அவ்வாறு புலனாய்வாளர்களால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதால், பல இளைஞர்கள் குறித்த கவனயீர்ப்பு நடவடிக்கையிலே இணைந்துகொள்ளவில்லை.
இருப்பினும் கணிசமான இளைஞர்கள் முகத்தில் கறுப்புத்துணி கட்டி, கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதுடன் அதனைத்தொடர்ந்து, மேலதிக மாவட்ட செயலரிடம் மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளனர்.
இலங்கையைப் பொறுத்தவரையில் நீதி மரணித்து விட்டது என்றே சொல்லவேண்டியிருக்கின்றது.ஏன் எனில் தற்போது நாட்டிலே போதைப்பொருட்கள் பல்கிப் பெரிகிப்போயுள்ள நிலையில், நாட்டு மக்கள் இவற்றால் பல்வேறு துன்பங்களுக்கும் உள்ளாகிவருகின்றனர்.
இவ்வாறான சூழலில் நீதிபதி சரவணராஜா, நீதியின் பங்கம் நின்று கட்டளை வழங்கியதற்காக அவருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு, அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு இந்த நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
இத்தகைய நிலைமைகள் இந்த நாட்டில் நீதி மரணித்து விட்டதான உணர்வையே முழு நாட்டு மக்களுக்கும் உணர்த்துகின்றது.
எனவே நீதிபதி சரவணராஜா விடயத்தில் சரியான விதத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, நியாயமான தீர்வினை வழங்கவேண்டுமென்பதே எமது நிலைப்பாடு – என்றார்.