நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ஓ.என்.ஜி.சி. செயல்படுத்தவில்லை

311 0

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் என்னும் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் 23 நாட்கள் போராட்டம் நடத்தினர். மத்திய, மாநில அரசுகள் அளித்த உறுதியை தொடர்ந்து நெடுவாசல் கிராமத்தில் மட்டும் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. வடகாடு, நல்லாண்டார்கொல்லை கிராமங்களில் போராட்டம் தொடர்ந்து நடக்கிறது.

இந்நிலையில் இந்திய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தின் (ஓ.என்.ஜி.சி.) காவிரி படுகை பகுதி செயல் இயக்குனர் குல்பீர் சிங், குழும பொதுமேலாளர் பவன்குமார் ஆகியோர் இந்த திட்டம் குறித்து நேற்று திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தின் நிலத்தடி நீராதாரம், சுற்றுச்சூழலை பாதிக்கும் எந்த ஒரு செயலிலும் ஓ.என்.ஜி.சி. ஈடுபடாது. காவிரி படுகையில் ஷேல் கியாஸ் என்னும் பாறை எரிவாயு, பாறை எண்ணெய் அல்லது நிலத்தடி படுகை மீத்தேன் ஆராய்ச்சி நடவடிக்கைகளில் ஓ.என்.ஜி.சி. ஈடுபடவில்லை.

நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்துடன் எங்களை தொடர்புபடுத்தி தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. ஓ.என்.ஜி.சி. நிறுவனம் அங்கு ஹைட்ரோ கார்பன் திட்டம் எதனையும் செயல்படுத்தவில்லை. எனவே இது தொடர்பான வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம்.

நிலத்துக்கு அடியில் உள்ள இயற்கை எரிவாயு, எண்ணெய் எடுப்பதால் பூகம்பம் வரும், கடல் நீர் புகுந்து நிலத்தடி நீராதாரம் பாதிக்கப்படும் என்பதெல்லாம் தவறான தகவல். விவசாயிகள் பாதிக்கப்படும் எந்த ஒரு திட்டத்தையும் நாங்கள் செயல்படுத்த மாட்டோம்.

நெடுவாசல் பகுதியில் எண்ணெய் வளத்தை கண்டறிய 13 இடங்களில் துரப்பன பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் போதுமான எண்ணெய் இல்லை என்பதால் 10 இடங்களில் திட்டம் கைவிடப்பட்டது. நல்லாண்டார்கொல்லை, புள்ளான்விடுதி, கோட்டைக்காடு பகுதிகளில் மட்டும் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டன. அந்த 3 இடங்களில் நாங்கள் எந்த பணியையும் மேற்கொள்ளவில்லை.

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தமிழகத்தில் மட்டும் தான் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. குஜராத், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இத்திட்டத்தை மக்கள் வரவேற்று உள்ளனர். நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை பொறுத்தவரை மத்திய அரசு தான் இறுதி முடிவை அறிவிக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.