நீதித்துறையின் சுயாதீனத்துவத்தைப் பாதுகாக்குமாறு வலியுறுத்தி உயர்நீதிமன்றத்தின் முன் சட்டத்தரணிகள் போராட்டம்

100 0
நீதிபதிகளினதும் நீதித்துறையினதும் கௌரவத்தையும் சுயாதீனத் தன்மையையும் பாதுகாக்குமாறு வலியுறுத்தி நாடளாவிய ரீதியிலுள்ள சட்டத்தரணிகள் இன்று திங்கட்கிழமை (9) கொழும்பு உயர்நீதிமன்றத்துக்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் ரி.சரவணராஜா உயிரச்சுறுத்தல் மற்றும் பல்வேறு அழுத்தங்கள் காரணமாக பதவி விலகுவதாக குறிப்பிட்டு கடந்த மாத இறுதியில் நீதிச்சேவைகள் ஆணைக்குழுவுக்கு அவரது இராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்திருந்ததுடன், நாட்டிலிருந்தும் வெளியேறியமை பல்வேறு சர்ச்சைகளையும் நீதித்துறை சுதந்திரம் தொடர்பில் கேள்விகளையும் தோற்றுவித்திருந்தது.

இவ்வாறானதொரு பின்னணியிலேயே நாட்டின் பல்வேறு பாகங்களிலும் உள்ள சட்டத்தரணிகள் ஒன்றிணைந்து இன்று திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு கொழும்பு, ஹல்ஃப்ஸ்டொப்பில் அமைந்துள்ள உயர்நீதிமன்றத்துக்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.