சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, ரத்தக் கொதிப்பு காரணமாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஜூன் 14-ம் தேதி அமலாக்கத் துறை அதிகாரிகள், அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். அவரது நீதிமன்றக் காவலை அக்டோபர் 13-ம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை நீட்டிப்பது இது 7-வது முறையாகும்.
இந்த நிலையில் இன்று (அக். 09) அதிகாலை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ரத்தக் கொதிப்பு ஏற்பட்டதால் சென்னையில் உள்ள ஸ்டான்லி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அங்கு அவருக்கு சர்க்கரை நோய்க்கான பரிசோதனையும் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது. மருத்துவர்களின் பரிசோதனைக்குப் பிறகே அவருக்கு தொடர்ந்து மருத்துவமனையிலேயே சிகிச்சை அளிக்கப்படுமா அல்லது மீண்டும் சிறைக்கு அனுப்பப்படுவாரா என்பது தெரியவரும்.
முன்னதாக, சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது சட்டப்படியானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததையடுத்து, அவரை அமலாக்கத் துறை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தது. இந்த விசாரணை முடிந்து, கடந்த ஆகஸ்ட் 12-ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. இதைத் தொடர்ந்து அவரது காவலை நீதிமன்றம் தொடர்ந்து நீட்டித்து வருகிறது.