அரசாங்கத்துக்கு வரி வருமானம் என்பது அத்தியாவசியமானதாகும். எனவே வரி அறவிடப்படக் கூடாது என நாம் கூறவில்லை. அடிப்படை சம்பளம் 50 000 முதல் அடுத்தடுத்த கட்டங்களுக்கு 6 – 24 சதவீதம் வரை படிப்படியாக வருமான வரி அறவிடப்பட வேண்டும் என்ற மாற்ற யோசனையை முன்வைப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
பணவீக்கம் வீழ்ச்சி என்பது பொருட்களின் விலை குறைவடைவதல்ல. பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் வேகம் குறைவடைவதாகும்.
எனவே முன்னர் அதிகரித்த விலைகள் இன்றும் அதே நிலைமையிலேயே காணப்படுகின்றன. இதன் காரணமாகவே மூளைசாலிகள் நாட்டை விட்டு வெளியேறும் வீதமும் அதிகமாகக் காணப்படுகிறது.
அண்மையில் சர்வதேச நாணய நிதியத்தின் முதற்கட்ட மீளாய்வு நிறைவடைந்துள்ள போதிலும், இறுதி தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை.
எனினும் நாணய நிதியத்தால் சில பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. எதிர்க்கட்சியானாலும் வரிகளை அறவிட வேண்டாம் என்று எம்மால் கூற முடியாது. காரணம் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தன்னிச்சையான தீர்மானங்களால் அரச வரி வருமானம் குறைவடைந்துள்ளதாக நாமே தொடர்ந்தும் சுட்டிக்காட்டி வந்தோம்.
இலங்கை போன்ற நாடுகளுக்கு மொத்த தேசிய உற்பத்திக்கு சமமாக 20 சதவீதமேனும் வரி அறவிடப்பட வேண்டும். எனினும் நியாயமற்ற விதத்தில் வரி அறவிடப்படக் கூடாது.
அரசாங்கம் எதிர்பார்க்கும் வருமானத்தை ஈட்டும் அதே வேளை, வருமான வரி அறவீட்டை எவ்வாறு முகாமைத்துவம் என்பது தொடர்பில் நாம் தரவு பகுப்பாய்வொன்றை முன்னெடுத்திருக்கின்றோம்.
அதற்கமைய அடிப்படை சம்பளம் 50 000 முதல் அடுத்தடுத்த அதிகரிப்புக்களுக்கு ஏற்பட 6 முதல் 24 சதவீதம் வரை வரியை அறிவிட்டால் அது பொறுத்தமானதாக இருக்கும்.
இதன் மூலம் வருடத்துக்கு 83 பில்லியன் ரூபா வருமானத்தைப் பெற முடியும். எனவே வரி முற்றாக நீக்கப்பட வேண்டும் என்று நாம் கூறவில்லை. அதே வேளை எவ்வாறு வரி அறவிடப்பட வேண்டும் என்ற மாற்றுத் திட்டத்தையும் முன்வைத்துள்ளோம் என்றார்.