உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் பேசுவதற்கு ஜனாதிபதி கத்தோலிக்க ஆயர் பேரவையை சந்திக்கவில்லை

132 0

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு ஜனாதிபதி எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கத்தோலிக்க ஆயர் பேரவையை சந்திக்கவில்லை. என்னுடன் தனிப்பட்ட ரீதியில் இடம்பெற்ற சந்திப்பின் போது விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமையவே ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் கிடைக்கப் பெற்றது என கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவர் ஹெரால்ட் அண்டனி ஆண்டகை தெரிவித்துள்ளார்.

அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜேர்மன் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் சகோதரமொழி பத்திரிகையொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே ஹெரால்ட் அண்டனி ஆண்டகை மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அதில் இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது :

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தைப் பெற்றுக் கொடுப்பதற்காக சுயாதீனமானதும், வெளிப்படை தன்மையானதுமான பக்கசார்பற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். உள்நாட்டில் முன்னெடுக்கப்படும் அவ்வாறான விசாரணைகள், சர்வதேச சுயாதீன விசாரணைக்குழுக்களின் கண்காணிப்பின் கீழ் இடம்பெற வேண்டும்.

இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை சகல தேசிய பிரச்சினைகளைப் போன்றே, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பிலும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஒரே நிலைப்பாட்டையே கொண்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் நியமிக்கப்பட்ட இரு ஆணைக்குழுக்கள் மற்றும் பாராளுமன்ற விசேட குழு ஆகியவற்றால் முன்மொழியப்பட்டுள்ள பரிந்துரைகள் இதுவரையிலும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

இதுவரை முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் குறைபாடுகள் காணப்படுகின்றமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்டுவதற்காக உள்நாட்டில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் சர்வதேசத்தின் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பது பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை உள்ளிட்ட கத்தோலிக்க ஆயர் பேரவையின் நிலைப்பாடாகும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கத்தோலிக்க ஆயர் பேரவையின் முழுமையான இனக்கப்பாட்டுடன் ஏகமனதாகவே அறிவிப்புக்கள் வெளியிடப்படும். அத்தோடு இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு ஜனாதிபதி எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கத்தோலிக்க ஆயர் பேரவையை சந்திக்கவில்லை.

கடந்த ஒரு வருடத்துக்கு முன்னர் ஜனாதிபதி தனிப்பட்ட ரீதியில் என்னை சந்தித்தார். அந்த சந்திப்பின் போது அப்போது நாட்டில் காணப்பட்ட பிரச்சினைகள் தொடர்பிலேயே நாம் பிரதானமாகக் கலந்துரையாடினோம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முழுமையான அறிக்கையை மதிப்பீடு செய்வதற்காக எம்மிடம் வழங்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய அந்த முழுமையான அறிக்கையிலுள்ள 6 தொகுதிகள் எமக்கு வழங்கப்பட்டன. அந்த அறிக்கை எமது சட்டத்தரணிகளால் தற்போது மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.