அவினாசி:அவினாசிஒன்றியம் இராமியம்பாளையம், குமாரபாளையம் , புஞ்சைத்தாமரைக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த ஒரு நிறுவனத்தின் உடுமலைபேட்டை கிளையில் சூப்பர் நேந்திரன் என்ற ரக வாழைக்கன்றுகளை வாங்கி நடவு செய்திருந்தனர். ஆனால் விவசாயிகள் எதிர்பார்த்தபடி குறிப்பிட்ட காலகெடுவுக்குள் வாழைகள் முழுவளர்ச்சியடையவில்லை.
இதனால் வாழை விவசாயிகளுக்கு ரூ.3 கோடிஇழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தாசில்தாரிடம் புகார் தெரிவித்திருந்தனர். இந்த புகாரின் அடிப்படையில் அவினாசி தாசில்தார் மோகன், தோட்டக்கலை துறை அலுவலர் அனுசியா ,உதவி அலுவலர்கள் சிவசக்தி, முரளி ஆகியோர் பாதிக்கப்பட்ட வாழை மரங்களை ஆய்வு செய்தனர்.
இதையடுத்து நேற்று தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் மோகன் தலைமையில் இரு தரப்பினருக்கு மத்தியில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் சந்திரகவிதா, உதவி இயக்குனர் உமாசங்கரி, கட்சி சார்பற்ற விவசாய சங்கத்தினர், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் மற்றும் அவினாசிசுற்றுவட்டார விவசாயிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.
அப்போது பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில், 13 மாதங்களில் அறுவடை செய்யும் ரகமாக சூப்பர் நேந்திரன் வாழைக்கன்றுகளை வாங்கி வந்து பயிரிட்டோம். ஆனால் குறிப்பிட்ட காலக்கெடுவை தாண்டியும் வாழைத்தாரில் சரிவர காய்பிடிக்காமல் முற்றிலும் பிஞ்சாகவே உள்ளது. இதனால் 3 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே இழப்பீடு வழங்க வேண்டும். இல்லாவிட்டால் போராட்டம் நடத்துவோம் என்றனர்.