கிராம சபையில் குறைகளை சொன்னவருக்கு கொலை மிரட்டல்: பாதுகாப்பு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு

68 0

திருநெல்வேலி ராமையன்பட்டி ஊராட்சி உறுப்பினருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் அவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் மானூர் வேப்பன்குளத்தை சேர்ந்த சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க நிறுவனத் தலைவர் மாரியப்பபாண்டியன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: ராமையன்பட்டி ஊராட்சி 4வது வார்டு உறுப்பினராக உள்ளேன். மே 1-ல் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் ஊராட்சித் தலைவர் டேவிட்டிடம் எனது வார்டில் உள்ள குறைகளை சரி செய்ய கோரிக்கை வைத்தேன். அன்று இரவில் என்னிடம் செல்போனில் பேசியவர்கள், ‘ஊராட்சித் தலைவரிடம் குறைகளை சொல்லக்கூடாது, மீறி பேசினால் கொலை செய்வோம்’ என மிரட்டினர்.

சிலர் என் வீட்டிற்கு நேரில் வந்து, ‘இனிமேல் ஊராட்சி அலுவலகத்துக்கு செல்லக்கூடாது, ஊராட்சித் தலைவர் பற்றி இனிமேல் பேசினால் கொலை செய்வதாக’ மிரட்டி சென்றனர். இதனால் எனக்கு போலீஸ் பாதுகாப்பு கேட்டு நெல்லை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தேன். இதுவரை பாதுகாப்பு வழங்கவில்லை. எனவே, எனக்கு கொலை மிரட்டல் விடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், எனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதி டி.நாகர்ஜூன் விசாரித்தார். மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் எஸ்.பாஸ்கர்மதுரம் வாதிட்டார். பின்னர் நீதிபதி, கிராம சபைக் கூட்டங்களில் பங்கேற்கவிடாமல் ஊராட்சித் தலைவர் தடுப்பதாகவும், இதனால் போலீஸ் பாதுகாப்பு கேட்டு மனுதாரர் கோரிக்கை வைத்துள்ளார். மனுதாரர் கிராம சபைக் கூட்டங்களில் பங்கேற்க போலீஸ் பாதுகாப்பு கோரி மனு அளிக்கலாம். அந்த மனு அடிப்படையில் மனுதாரருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.