தேசிய ஒளடத ஒழுங்குப்படுத்தல் அதிகார சபையின் தீர்மானத்துக்கு ஆட்சேபனை

76 0

தேசிய ஒளடத ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் பணிப்பாளர் சபையினால் எடுக்கப்பட்ட அரசியலமைப்புக்கு முரணான தீர்மானத்துக்கு கோப் குழு ஆட்சேபனை தெரிவித்துள்ளது.

அதிகாரசபையின் பணிப்பாளர் சபை எடுத்த தீர்மானத்தை இடைநிறுத்தல் உட்பட  முக்கிய மூன்று அறிவுறுத்தல்களை கோப் குழு முன்வைத்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார தலைமையில் வெள்ளிக்கிழமை (06)  கூடிய அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவிற்கு (கோப் குழு) தேசிய ஔடத ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை  அழைக்கப்பட்டிருந்தது.

2019 மற்றும் 2020ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகை குறித்து ஆராயப்பட்டது.

இருந்தபோதும் தேசிய ஔடத ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் பணிப்பாளர் சபையினால்  2023.08.18ஆம் திகதி எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைய கணக்காய்வாளர் நாயகத்தின் அலுவலக அதிகாரிகள் தகவல்களைக் கோரியதுபோது அவ்வாறான கோரிக்கை எழுத்துமூலம் முன்வைக்கப்பட வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும் இது அரசியலமைப்பின் ஊடாக கணக்காய்வாளர் நாயகத்துக்கு  வழங்கப்பட்ட அதிகாரத்தை மீறும் செயற்பாடு என்றும் கோப் குழு சுட்டிக்காட்டியது.

எனவே பாராளுமன்றத்துக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை மீறும் செயல் என்பது கோப் குழுவின் நிலைப்பாடாக இருந்தது.

அத்துடன், இந்தப் பணிப்பாளர் சபையின் தீர்மானம் தொடர்பில் சுகாதார அமைச்சின் செயலாளருக்குத் தெரியாது என்பதும் இங்கு புலப்பட்டது. குறிப்பாக இந்தத் தீர்மானத்தின் ஊடாக கணக்காய்வாளர் நாயகத்தின் சுயாதீனத்தன்மைக்குப் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும்  இவ்வாறான நிலைமை எதிர்காலத்தில் ஏற்படக்கூடாது என்றும் குழுவின் தலைவர் தெரிவித்தார்.

வருகை தந்திருந்த அதிகாரிகளுக்கு கோப் குழு கடும் எச்சரிக்கை விடுத்தது. தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபைக்கு கோப் குழுவினால் மூன்று முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

கணக்காய்வாளர் நாயகத்தின் அதிகாரத்துக்கு அமைய செயற்படுமாறு சுகாதார அமைச்சின் கீழ் உள்ள சகல நிறுவனங்களுக்கும் அமைச்சின் செயலாளர் ஊடாக சுற்றுநிருபத்தை வெளியிடுதல்,தேசிய ஔடத ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் பணிப்பாளர் சபையினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை இடைநிறுத்தல், கணக்காய்வாளர் நாயகத்தினால் குறிப்பிடப்படும் தினத்தில் தேசிய ஔடத ஒழுங்குபடுத்தல், அதிகாரசபையை மீண்டும் கோப் குழு முன்னிலையில் அழைத்தல் உள்ளிட்ட முக்கிய மூன்று அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.