தமிழ் விவசாயிகளின் அமைதிவழி போராட்டத்துக்கு எதிராக நீதிமன்றை நாடி தடையுத்தரவு பெற்ற பொலிஸார்

182 0

 

மயிலத்தமடு மேய்ச்சற்தரை நிலம் மீதான ஆக்கிரமிப்பை நிறுத்த  கோரிய தமிழ் பண்ணையாளர்களின் ஆர்ப்பாட்டத்தினை நிறுத்தக் கோரியும் இனிவரும் நாட்களில் மேற்கொள்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள ஆர்ப்பாட்டம் மற்றும் ஊர்வலத்தினை நிறுத்தக் கோரியும் ஏறாவூர் நீதவான் நீதிமன்றத்தினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இத்தடையுத்தரவானது மயிலத்தமடு கால்நடை வளர்ப்பாளர் சங்கத்தின் தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்டவர்களின் பெயர் குறிப்பிட்டு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த தடையுத்தரவில், மேற்குறிப்பிட்ட ஆர்ப்பாட்டத்தினால் அல்லது ஊர்வலத்தினால் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கக் கூடிய வாய்ப்பு இருப்பதனை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.

இதன் பிரகாரம் சந்திவெளி பொலிஸ் நிலையத்தினால் முன்வைக்கப்பட்ட விடயங்கள் சம்பந்தமாக பரிசீலனை செய்து ஏற்றுக் கொள்ளக் கூடியதாக உள்ளதால் கீழ்வரும் கட்டளையை மன்று பிறப்பிக்கின்றது.

மேற்படி உங்களால் உங்கள் மூலம் ஆர்ப்பாட்டத்தை ஏற்படுத்தக் கூடியவர்களால் உங்களுடன் சேர்ந்து தனிநபர், குழுக்களாக ஒன்றுகூடி 2023.10.07 மற்றும் 2023.10.08ம் திகதிகளில் சந்திவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சித்தாண்டி முருகன் கோவில் முன்னால் உள்ள வீதியில் போக்குவரத்துக்கு இடையூறாகவோ அல்லது பொதுமக்கள் பிரயாணிகள், அம்புலன்ஸ் வாகனங்களுக்கு இடையூறு விளைவிக்காது சேதம் ஏற்படுத்துவதையோ பொதுமக்கள் கோவம் கொள்ளும் அளவில் செய்ய வேண்டாம் என இலங்கை தண்டனைத் சட்டக் கோவையிலுள்ள சரத்துக்களின் பிரகாரம் கட்டளை பிறப்பிக்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்படி மாதவனை மயிலத்தமடு பண்ணையாளர்களின் போராட்டமானது தொடர்ந்து 23 நாட்களாக அமைதியான முறையில் இடம்பெற்று வருகின்ற நிலையில் ரணிலின் மட்டக்களப்பு விஜத்தினைக் கருதி பொலிசாரினால் மன்றுக்கு அறிவித்து இத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.