நீண்டகாலமாக சிறையில் உள்ள முஸ்லிம் கைதிகள் உள்ளிட்ட 49 கைதிகளை நன்னடத்தை அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு எடுத்து அதற்கான பரிந்துரையை ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. ஆனால் இந்த பரிந்துரைக்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை.
இந்நிலையில், சிறையில் உள்ள கைதிகளை நன்னடத்தை அடிப்படையில் விடுவிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. மேலும், சிறையில் உள்ள கைதிகள் ஷாகுல் ஹமீது, அஸ்லாம் உள்ளிட்ட 5 பேருக்கு ஜாமீன் கோரி இடைக்கால மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்த வழக்குகள் நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜ் திலக் ஆஜராகி, “நன்னடத்தை அடிப்படையில் சிறையில் உள்ள கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யும் தமிழக அரசின் பரிந்துரைக்கு இன்னும் ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. அந்த பரிந்துரை தொடர்ந்து நிலுவையில் உள்ளது” என்றார்.
மேலும், “உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில் தற்போது ஜாமீன் கோரிஉள்ள சிறைவாசிகளை விடுவிப்பதற்கான கோப்புகள் ஆளுநரிடம் நிலுவையில் இருப்பதால், ஜாமீன் வழங்குவதில் அரசுக்கு எந்த ஆட்சேபமும் இல்லை” என்றார்.
அதையடுத்து நீதிபதிகள், 5 பேருக்கும் 3 மாத காலத்துக்கு இடைக்காலமாக நிபந்தனை ஜாமீன் வழங்கி விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.