வனவாசத்தின்போது அயோத்தியிலிருந்து ராமேசுவரம் வரை ராமர் பயணித்ததாகக் கருதப்படும் இடங்களில் ஸ்ரீராமர் தூண்களை நிறுவுவதற்காக அசோக் சிங்கால் அறக்கட்டளை 290 இடங்களை தேர்வு செய்துள்ளது.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை 2020 ஆக. 5-ம் தேதி நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டிவைத்து, கட்டுமானப் பணிகளைத் தொடங்கிவைத்தார்.
2024 ஜனவரியில் மகர சங்கராந்தி நாளில் கருவறையில் குழந்தை ராமர் சிலை நிறுவப்பட உள்ளது. அதன் பின்னர் இக்கோயில் பக்தர்களுக்காக திறக்கப்பட உள்ளது.கோயில் கட்டுமானப் பணிகளுக்காக நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
ராமேசுவரத்திலிருந்து லீகல் ரைட்ஸ் கவுன்சில் இந்தியா என்றஅமைப்பு சார்பில் 5 அடி உயரம், 613 கிலோ எடை கொண்ட வெண்கலமணி அயோத்திக்கு அனுப்பப்பட்டு, ராமர் கோயிலில் பொருத்தப்பட உள்ளது. இந்த மணியின் ஓசை 10 கி.மீ. தொலைவுக்கு கேட்கும்.
இந்நிலையில், ராமர் கோயில் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ள ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையுடன், அசோக் சிங்கால் அறக்கட்டளை இணைந்து, ராமர் தனது வனவாசத்தின்போது அயோத்தியிலிருந்து ராமேசுவரம் வரை பயணித்ததாக நம்பப்படும் இடங்களில் ஸ்ரீராமர் தூண்களை நிறுவுவதற்காக 290 இடங்களை தேர்வு செய்துள்ளது.
முதல் தூண் அயோத்தியில் உள்ள மணிபர்வத்தில் நிறுவப்பட உள்ளது. 15 அடி உயரம், 2.5 அடிஅகலம், 12 டன் எடை கொண்ட இந்த தூண், ராஜஸ்தானின் மவுன்ட் அபுவில் கிடைக்கக்கூடிய கற்களால் செதுக்கப்பட்டுள்ளது. அதில் 4 மொழிகளில் ராமர் வனவாசம் குறித்த கதைகளும், வில் மற்றும் அம்பும் பொறிக்கப்பட்டிருக்கும். தூணின் மேல் 4 அடிக்கு பித்தளை கொடிக் கம்பமும் உள்ளது.
கடைசி தூண் ராமேசுவரம் அருகேயுள்ள தனுஷ்கோடி அரிச்சல்முனையில் நிறுவப்படும் என அசோக் சிங்கால் அறக்கட்டளை தெரிவித்துள்ளது. விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவராக 20 ஆண்டுகள் பணியாற்றியவர் அசோக் சிங்கால். இவர் ராம ஜென்ம பூமி இயக்கத்தை தொடங்கி, அயோத்தியில் மீண்டும்ராமர் கோயில் கட்டும் பணிக்காக தீவிரமாகப் பணியாற்றி வந்தார்.இவரது மறைவுக்குப் பிறகு, அசோக்சிங்கால் அறக்கட்டளை தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.