ஜேர்மனியில், முதன்முறையாக ட்ரோன் மூலம் வீடுகளுக்கு மளிகைப்பொருட்கள் டெலிவரி செய்யும் திட்டம் ஒன்று துவக்கப்பட்டுள்ளது.
Wingcopter மற்றும் பிராங்பர்ட் பல்கலையின் அறிவியல் பிரிவு ஒன்று இணைந்து இந்த ட்ரோன் மூலம் வீடுகளுக்கு மளிகைப்பொருட்கள் டெலிவரி செய்யும் திட்டத்தைத் துவங்கியுள்ளன.
உங்களுக்குத் தேவையான பொருட்களை ஒன்லைன் மூலம் ஆர்டர் செய்தால் போதும், அவை உங்கள் வீடு தேடி வந்து சேரும், ட்ரோன் மூலமாக.
செயல்படுவது எப்படி?
மக்கள் தங்களுக்குத் தேவையான மளிகைப் பொருட்களை ஒன்லைனில் ஆர்டர் செய்கிறார்கள். அவர்கள் கேட்ட பொருட்களை, இந்த ட்ரோன் மூலம் பொருட்கள் டெலிவரி செய்யும் அமைப்பைச் சேர்ந்த ஒருவர், கடைகளிலிருந்து பெற்றுக்கொண்டு, ட்ரோன் இருக்கும் இடத்துக்குச் செல்கிறார்.
அங்கு, ட்ரோனில், பொருட்களை வைப்பதற்கான இடத்தில், அந்த பொருட்கள் அடங்கிய பெட்டி வைக்கப்படுகிறது. அந்த பெட்டியுடன் பறக்கும் ட்ரோன், வாடிக்கையாளர் வாழும் பகுதியிலுள்ள ட்ரோன் இறங்கும் ஓரிடத்தைச் சென்றடைகிறது.
அங்கிருக்கும் அதே அமைப்பைச் சேர்ந்த ஒருவர், மளிகைப் பொருட்கள் இருக்கும் பெட்டியை எடுத்துக்கொண்டு வாடிக்கையாளரின் வீட்டுக்கு சைக்கிளில் சென்று, அவரிடம் அவர் ஆர்டர் செய்த பொருட்களை ஒப்படைக்கிறார்.
மளிகைக்கடைகள் அருகில் இல்லாத இடங்களில், அல்லது நகரங்களை விட்டு வெகு தொலைவில் வாழ்பவர்களுக்கு இந்த திட்டம் ஒரு வரப்பிரசாதம் எனலாம்.
மளிகைப் பொருட்கள் எப்படி டெலிவரி செய்யப்படுகின்றன என்பதை, இங்கு இடம்பெற்றுள்ள வீடியோவில் காணலாம்.