பாதுகாப்பு செயலாளர், இராணுவத் தளபதி ஆகியோர் எனக்கு அச்சுறுத்தல் விடுத்தனர்!-சந்திம வீரக்கொடி

66 0

இராணுவ உயர் அதிகாரிகளின் ஊழல் மற்றும் வீண் செலவுகளை மட்டுப்படுத்துமாறு தேசிய பாதுகாப்பு தொடர்பான தெரிவுக்குழுவில் நான் குறிப்பிட்ட போது பாதுகாப்பு செயலாளர், இராணுவ தளபதி ஆகியோர் எனக்கு அச்சுறுத்தல் விடுத்தார்கள்.

ஆகவே இவர்களை உடனடியாக பாராளுமன்ற ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமை தொடர்பான தெரிவுக்குழுவுக்கு அழைத்து  விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் எதிரணியின் உறுப்பினர் சந்திம வீரக்கொடி சபையில் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (06) இடம்பெற்ற அமர்வின் போது  சிறப்புரிமை மீறல் பிரச்சினையை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

பாராளுமன்ற உறுப்பினர் அட்மிரல் சரத் வீரசேகர தலைமையிலான தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழு வியாழக்கிழமை (5) பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் கூடியது.

இதன்போது இராணுவத்தின் எண்ணிக்கையை ஒரு இலட்சமாக குறைப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது.

நாடு பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில் பலர் தொழில் வாய்ப்புக்களை இழந்து பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

இவ்வாறான நிலையில் அப்பாவி இராணுவ வீரர்களின் தொழில்வாய்ப்புக்களை முடக்கும் வகையில் தீர்மானம் எடுத்தால் அது சமூக கட்டமைப்பில் பாரிய நெருக்கடிகளை ஏற்படுத்தும்.

ஆகவே இராணுவ வீரர்களின் எண்ணிக்கையை குறைக்காமல் இராணுவ உயர் அதிகாரிகளின் ஊழல் மற்றும் வீண் செலவுகளை குறைக்க வேண்டும் என்று தெரிவுக்குழுவில் யோசனை முன்வைத்தேன்.

பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு முன்னிலையாகும் அரச அதிகாரிகள் பாராளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பொறுப்புடன் பதிலளிக்க வேண்டும்.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்பட கூடாது என பாராளுமன்ற ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமை தொடர்பான விதிவிதானங்கள் குறிப்பிடப்பட்டுள்ள போதும் பாதுகாப்பு செயலாளர் உட்பட இராணுவ தளபதி நான் குறிப்பிட்ட விடயத்தை சுட்டிக்காட்டி எனக்கு தெரிவுக்குழுவின் தலைவர் முன்னிலையில் அச்சுறுத்தல் விடுத்தனர்.

தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவர் சரத் வீரசேகரவுக்கு  பாராளுமன்ற விதிவிதானங்கள் ஒன்றும் தெரியாது.

நீதவானுக்கு அச்சுறுத்தல் விடுத்த பிரச்சினையில் உள்ளதால் அவர் எனக்கு எதிராக தெரிவுக்குழுவுக்குள் விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் குறித்து அவதானம் செலுத்தவில்லை. அத்துடன் தெரிவுக்குழுவுக்குள் பேசப்பட்ட விடயங்களின் குரல் பதிவுகளை வெளியிட வேண்டாம் எனவும் தெரிவுக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் இராணுவ வீரர்களுக்கான ஓய்வூதிய கொடுப்பனவு பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இராணுவ உயர் அதிகாரிகளுக்காக அதிக நிதி செலவிடப்படுகிறது.

பாதுகாப்பு செயலாளர் காலையில் நடைபவணி செல்லும் போது அதிக பாதுகாப்பு வழங்கப்பட்டு மக்கள் நிதி செலவிடப்படுகிறது. ஆனால் நாட்டு மக்கள் 225 பாராளுமன்ற உறுப்பினர்களை கடுமையாக விமர்சிக்கிறார்கள்.

இராணுவ தளபதி மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோர்  எனக்கு எதிராக அச்சுறுத்தல் விடுத்தமை நீதிமன்றத்தின் ஊடாக தண்டனைக்குரிய விடயமாகும்.

ஆகவே இவர்களை பாராளுமன்ற ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமை மீறல்  குழுவுக்கு அழைத்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்துகிறேன் என்றார்.