கொழும்பில் பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல் தொடர்பான தகவலின் உண்மைத்தன்மையை அரசாங்கம் நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும். இது தொடர்பாக பாராளுமன்றத்துக்கு விசேட அறிவிப்பொன்றை விடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (6) விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
கொழும்பில் முக்கிய 7 இடங்களுக்கு ஐ.எஸ். குண்டுத்தாக்குதல் அச்சுறுத்தல் என சிங்கள தேசிய பத்திரிகை ஒன்றில் அறிக்கையிடப்பட்டிருக்கிறது.
இந்த விடயம் தொடர்பாக பாராளுமன்றத்துக்கும் நாட்டுக்கும் அறிவுறுத்த வேண்டும். இந்த பயங்கரவாத நடவடிக்கை தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஐ.எஸ். பயங்கரவாதிகளால் திட்டமிடப்பட்டிருப்பதாகவே குறித்த பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இது மிகவும் பாரதூரமான விடயம். அதனால் இதன் உண்மை தன்மை தொடர்பாக ஆராய்ந்து விசாரணை மேற்கொள்ள வேண்டும். ஏனெனில் 30 வருட பயங்கரவாத யுத்தம், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட நாடு.
அதனால் இதுதொடர்பாக கருத்திற்கொண்டும் குறிப்பாக கடந்தகால சம்பவங்களால் பாடம் கற்றுக்கொண்டும், இந்த அச்சுறுத்தல் தொடர்பாக பயங்கரவாத விசாரணை பிரிவை அடிப்படையாகக்கொண்டு மிகவும் முறையான வேலைத்திட்டம் ஒன்றை மேற்கொள்ள வேண்டும். இந்த பயங்கரவாத அச்சுறுத்தல் தொடர்பாக பாராளுமன்றத்துக்கு அறிவிப்பொன்றை விடுக்க வேண்டும்.
அத்துடன் இந்த பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல் தொடர்பான தகவலின் உண்மைத் தன்மை தொடர்பாக மக்கள் தெரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது. அதனால் இந்த விடயங்களை வெளிப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேநேரம் பங்கரவாதத்தை அடக்குவதற்காக சட்ட ரீதியில் எடுக்க முடியுமான உச்ச நடவடிக்கைகயை மேற்கொண்டு அரசாங்கம் இதனை முன்னெடுக்க வேண்டும் என்றார்.