முள்ளியவளையில் உள்ள பழம்பெரும் ஆலயங்களில் கல்யான வேலவர் ஆலயமும் ஒன்றாக காணப்படுகிறது.
குமாரபுரம் முருகன் கோவில், ஊற்றங்கரை சித்தி விநாயகர் ஆலயம், காட்டா விநாயகர் ஆலயம், மாமூலை கண்ணன் கோவில் போன்ற பழம்பெரும் ஆலயங்களின் வரிசையில் கல்யான வேலவர் ஆலயமும் ஒன்றாகும்.
மாங்குளம் முல்லைத்தீவு வீதியில் கலைமகள் பாடசாலைக்கு அருகில் அமைந்துள்ள இந்த ஆலயம் முள்ளியவளை வாழ் மக்களின் மனங்களில் நிறைந்திருக்கும் இறைவழிபாட்டுக்குரிய இறைவன் முருகனின் வாழிடம்.
ஆலயத்திற்கு செல்வதற்கு பல வழிகள் இருக்கின்றன. பிரதான நுழைவாயிலாக மாங்குளம் முல்லைத்தீவு பிரதான வீதியில் (A34) இருந்து ஆரம்பித்து கோவிலினருகாக செல்லும் வீதி அமைகிறது.
இந்த பிரதான வீதியில் கல்யான வேலவர் ஆலயத்தை குறியீட்டுச் சொல்லும் வளைவு அமைப்புப் பணிகள் ஆரம்பமாகியுள்ளன.
சுமார் 4.5 மில்லியன் செலவுகளை கொண்ட இந்த திட்டப் பணிகளை புலம்பெயர் நன்கொடையாளர் ஒருவரின் நிதியுதவியுடன் கோவில் நிர்வாகத்தினரின் மேற்பார்வையில் ஒப்பந்ததாரர்கள் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூன்று மாத காலத்தினுள் கட்டுமானப்பணிகள் நிறைவு செய்வதற்கு திட்டமிட்டுள்ளதாக அறிய முடிகிறது.கலைமகள் தமிழ் வித்தியாலய அதிபரும் சமய ஆர்வலருமான கமலகாந்தனின் சிந்தனையில் இந்த திட்டம் முன்மொழியப்பட்ட இருந்தது.
புலம்பெயர் தன்னார்வலர் ஒருவர் நிதியளிக்க முன்வந்துள்ளமையும் முள்ளியவளை மக்களின் ஒருமித்த பெரு விருப்புடனும் இது முன்னெடுக்கப்படுவதாக அறிய முடிகிறது.
அவர் முள்ளியவளையை சொந்த இடமாக கொண்டு புலம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பிரதான வீதியான மாங்குளம் முல்லைத்தீவு வீதியினால் பயனிப்போருக்கு ஆலயத்தை நினைவில் கொள்வதற்கும் இடங்களில் குறியீட்டிடமாக குறித்துச் சொல்லவும் இது உதவும்.
இப்போது ஆலயங்களுக்கான வீதி வளைவுகள் பொதுவாக எல்லா ஆலயங்களிலும் அமைக்கப்பட்டு வருவதும் ஒரு காரணம் என கமலகாந்தன் அதிபர் மேலும் குறிப்பிட்டார்.
முள்ளியவளை கல்யாண வேலவர் ஆலயத்தின் இந்த வளைவு அமைப்புப் பணிகள் முற்றுப் பெற்று விட்டால் முள்ளியவளையில் ஏற்படும் தோற்ற மாற்றம் முள்ளியவளையை ஆன்மீக ஈடுபாட்டை கொண்டதும் அழகானதுமானதாக மாற்றிவிடும் என மன்னார் மடு கல்வி வலயத்தின் தமிழ்ப்பாட உதவிக் கல்விப்பணிப்பாளரும் ஆலயத்திற்கு அருகில் வசிப்பவருமான மனோறஞ்சன் குறிப்பிட்டுள்ளார்.