நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கின் முக்கிய சாட்சிகளில் ஒருவரான ‘கஜன் மாமா’ என்று அழைக்கப்படுகின்ற ரங்கசாமி கனகநாயகம் என்பவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
ரங்கசாமி கனகநாயகம் நேற்று(05.10.2023) அதிகாலை மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
மாரடைப்பு காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்ற போதிலும் அவரது மரணம் திட்டமிட்ட ஒரு படுகொலையாக இருக்கலாம் என்று பொதுமக்கள் சந்தேகம் வெளியிடுகின்றனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் 25.12.2015 கிறிஸ்மஸ் நள்ளிரவு ஆராதனையின் போது மட்டக்களப்பு மரியாள் இணைப் பேராலயத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்.ரீ.எம்.வீ.பி. என்ற ஆயுதக் குழுவே அந்த படுகொலையில் சம்பந்தப்பட்டது என்கின்ற சந்தேகத்தில் அந்த ஆயுதக் குழுவின் தலைவர் பிள்ளையான் மற்றும் அந்த படுகொலையின் பிரதான சாட்சியான கஜன் மாமா(ரங்கசாமி கனகநாயகம்) உட்பட பலர் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டார்கள்.
கோட்டாபய ராஜபக்ச இலங்கையின் ஜனாதிபதியானதை தொடர்ந்து பிள்ளையான் உட்பட குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் அனைவருமே விடுதலை செய்யப்பட்டார்கள்.
பிள்ளையானின் விடுதலையில் அரச இயந்திரம் முறைகேடாகச் செயற்பட்டதாகவும் பிள்ளையான் விடுதலையின் பின்னணியில் ஏராளமான சதிகள் இருப்பதாகவும் பிள்ளையானின் முக்கியசகாவான அசாத் மௌலான சர்வதேச ஊடகங்களிடமும் ஐ.நாவிடமும் ஐரோப்பிய புலனாய்வு பிரிவினரிடமும் வாக்குமூலம் வழங்கியிருந்த நிலையில் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை விடயம் மறுபடும் பேசுபொருளாகிவிட்டிருந்தது.
அந்த வகையில் சர்வதேச ஊடகங்களிடமும் சில வெளிநாட்டு இராஜதந்திரிகளிடமும் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை விவகாரம் தொடர்பான தகவல்களை வெளியிட்ட நிலையில் ரங்கசாமி கனகநாயகம் திடீரென்று மரணமடைந்துள்ளதானது மக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி வருகின்றது.
கிளிநொச்சி கண்டாவளையை பிறப்பிடமாக கொண்ட கஜன் மாமா இந்தியாவில் பயிற்சி பெற்று ஈ.என்.டீ.எல்.எப். அமைப்பில் நீண்டகாலமாக செயற்பட்டு வந்தார்.
அதன் பின்னர் இலங்கை புலனாய்வு பிரிவினருடன் இணைந்து பணியாற்றிய இவர், ரீ.எம்.வி.பி. என்ற அமைப்பு உருவாக்கப்பட்டபோது அதனுடன் இணைந்து செயற்பட பணிக்கப்பட்டிருந்தார்.
ரீ.எம்.வி.பி. அமைப்பில் செயற்பட்டு வந்த கஜன் மாமா 2015ம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தைப் படுகொலை செய்யும் முகமாக பிள்ளையான் தலைமையிலான ஒரு குழு தீவுச் சேனையில் இருந்து வாகனத்தில் புறப்பட்டது முதலாக படுகொலை வரையிலான அனைத்து விடயங்களையும் ஒரு நேரடிச் சாட்சியாக சர்வதேச ஊடகங்களிடம் ஒப்படைக்க முன்வந்திருந்தார்.
இந்த நிலையில் இன்றையதினம் கஜன் மாமா திடீரென்று மரணமடைந்ததானது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாக மட்டக்களப்பு மக்கள் தெரிவிக்கின்றனர்.