அமெரிக்காவில் வசித்து வரும் புகழ் பெற்ற பல் மருத்துவர் அலெக்ஸாண்டர் ஜொவனோவிக் (Aleksandar Jovanovic). இவர், தனக்கு சொந்தமான பங்களா ஒன்றை செப்டம்பர் 2021ல் தங்கும் விடுதி போல் குறுகிய காலத்திற்கு வாடகைக்கு விட எண்ணி ஏர்பிஎன்பி (Airbnb) வலைதளத்தில் விளம்பரமும் செய்தார்.
இதனை கண்டு இவரை தொடர்பு கொண்ட எலிஸபெத் ஹர்ச்ஹார்ன் (Elizabeth Hirschhorn) என்பவருக்கு 6 மாத காலத்திற்கு சுமார் ரூ.17,31,580 ($20,793) வாடகைக்கு விட சம்மதித்தார். இருவரும் ஒப்பந்தம் செய்து கொண்டனர்.
ஆரம்ப காலத்தில் இவர்கள் இருவரும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். ஒரு முறை பங்களாவில் ரிப்பேர் வேலை செய்ய அலெக்ஸாண்டர் சென்ற போது, அது சரியாக பராமரிக்கப்படவில்லை என்பதை கண்டார்.
அதனை மீண்டும் சரி செய்யும் வரை ஒரு ஓட்டலில் தங்குமாறும் அதற்காகும் செலவை கொடுப்பதாகவும் எலிஸபெத்தை அவர் கேட்டு கொண்டார். ஆனால், அதற்கு எலிஸபெத் மறுத்தார்.அடுத்ததாக தனது வீட்டில் வந்து தங்குமாறு அலெக்ஸாண்டர் கேட்க, அதற்கும் எலிஸபெத் மறுத்தார்.
2022 ஏப்ரலில் அவர்களது ஒப்பந்தம் காலாவதியானது. ஆனால், எலிஸபெத் பங்களாவை காலி செய்ய மறுத்தார்.வீட்டை மறுசீரமைப்பு செய்ய விரும்பிய அலெக்ஸாண்டர், கட்டிடங்களின் பாதுகாப்பு துறையை அணுகி விண்ணப்பம் செய்து, வீட்டை காலி செய்யுமாறு எலிஸபெத்திற்கும் நோட்டீஸ் அனுப்பினார்.
உடனடியாக அதிகாரிகளை அணுகிய எலிஸபெத் தன்னை அலெக்ஸாண்டர் சட்ட விரோதமாக வெளியேற்ற முயற்சிப்பதாகவும் தான் வெளியேற மறுகுடியிருப்பிற்கான கட்டணமாக சுமார் ரூ.83 லட்சம் ($100,000) அலெக்ஸாண்டர் தர வேண்டும் எனவும் நிபந்தனை விதித்தார்.இதையடுத்து சம்பந்தபட்ட அதிகாரிகள் பங்களாவை ஆய்வு செய்து அதில் பல கட்டிட வழிமுறைகள் மீறப்பட்டுள்ளதாகவும் அந்த வீடு குடியேற்றத்திற்கு தகுதியானதுதான் என நிரூபித்து விட்டுத்தான் அலெக்ஸாண்டர் வெளியேறும் உத்தரவை அனுப்ப முடியும் எனவும் உத்தரவிட்டனர்.இதனால் எலிஸபெத் மீது அலெக்ஸாண்டர் வழக்கு தொடர்ந்தார்.
அலெக்ஸாண்டர் தனது பங்களாவை வாடகைக்கு விடுவதற்கு முறையான பதிவுகளை பெறாமலேயே வாடகைக்கு விட்டுள்ளார். அதில் அனுமதி பெறாமல் ஒரு ஷவர் வேறு நிறுவி உள்ளார். பதிவு பெறாமல் வாடகைக்கு விட முயன்றது சட்ட விரோதமாக பணம் சம்பாதிக்கும் முறையில் அடங்கும்.
அலெக்ஸாண்டர் முறையான பதிவு பெற முயற்சிக்க வேண்டும். அவர் தவறுகளை சரி செய்து வழிமுறைகளை சீராக்கும் வரை எலிஸபெத் அங்கு வசிக்கலாம்\” என வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது.இது வீட்டை மிக சுலபமாக வாங்கும் ஒரு வழிமுறை என அலெக்ஸாண்டர் தரப்பில் பலர் விமர்சிக்கின்றனர்.
வாடகைக்கு வீட்டில் குடியிருப்பவர் வீட்டை காலி செய்ய மறுத்து, காலி செய்ய வேண்டுமென்றால் ஒரு பெரும் தொகையை கேட்பதும், நீதிமன்றத்தில் பல வருடங்கள் வழக்குகள் நடைபெறுவதும், இதுவரை இந்தியாவில் மட்டுமே அதிகம் நடைபெற்றது. தற்போது அமெரிக்காவிலும் இது தொடங்கியுள்ளதாக சமூக வலைதளங்களில் பயனர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.