பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தை வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவு

140 0

 பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தை வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலை சேர்ந்த லட்சுமி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், “மத்திய அரசின் அனைவருக்கும் வீடு கட்டும் (பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா) திட்ட பயனாளியாக 2018-ல் தேர்வு செய்யப்பட்டேன். ஆனால், திட்டத்தின் கீழ் எனக்கு வர வேண்டிய பணம் எனது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டபோது சரியாக பதிலளிக்கவில்லை. பின்னர், என் பெயரிலுள்ள மற்றொரு பெண்ணை பயனாளியாக சேர்த்து அதிகார முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. எனவே, எனக்கு வர வேண்டிய பணத்தை வழங்கவும், முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு கோரப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி பி.புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், மனுதாரர் புதிதாக விண்ணப்பித்தால் பரிசீலிக்கப்படும் என்றார். இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், “பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம் வீடற்ற ஏழை, எளிய மக்களுக்கான திட்டமாகும். இத்திட்டத்தில் முறைகேடு செய்வதை ஏற்க முடியாது. பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம் வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுத்தப்பட வேண்டும். திட்டத்தின் பலன்கள் சரியான பயனாளிகளுக்கு சென்றடைவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். மனுதாரரின் புகார் தொடர்பாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் விசாரித்து, தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மனுதாரருக்கு 12 வாரத்தில் நிவாரணம் வழங்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டது.