2023-ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு, நார்வே எழுத்தாளரான ஜான் ஃபோஸ்ஸேக்கு (Jon Fosse) அறிவிக்கப்பட்டுள்ளது. போஸ்ஸேயின் “சொல்ல முடியாதவற்றுக்காக குரல் கொடுக்கும் அவரது புதுமையான நாடகங்கள் மற்றும் உரைநடைகளுக்காக” இப்பரிசு வழங்கப்படுவதாக தி ராயல் ஸ்வீடிஷ் அகாடமி தெரிவித்துள்ளது.
இலக்கியத்துக்காக நோபல் பரிசு பெறும் ஜோன் போஸ்ஸின் சிறந்தப் படைப்பு ‘செப்டோலோஜி’. இதனை 2021-ம் ஆண்டு அவர் எழுதி முடித்தார். மற்றவை ‘தி அதர் நேம் 2020’, ‘ஐ இஸ் அனதர் 2020’ மற்றும் ‘ஏ நியூ நேம், 2021’ போன்றவை.
நார்வேயின் வெஸ்ட் கோஸ்டில் கடந்த 1959-ம் ஆண்டு ஜான் ஃபோஸ்ஸே பிறந்தார். நார்வேஜியன் நிநோர்ஸ்க் மொழியில் எழுதப்பட்ட இவரது மகத்தான படைப்புலகம் நாடகங்கள், நாவல்கள், கவிதைத் தொகுப்புகள், கட்டுரைகள், சிறார் இலக்கியம், மொழிபெயர்ப்புகள் என பல வகைமையைக் கொண்டவை.
கடந்த ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு பிரபல பிரெஞ்சு எழுத்தாளர் ஆனி எர்னாக்ஸுக்கு வழங்கப்பட்டது.தனிப்பட்ட அனுபவத்தில் இருந்து உண்மையை உடைத்து எழுதக்கூடிய எழுத்தாளராக ஆனி எர்னாக்ஸ் அறியப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு அக்.2-ம் தேதி முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதுவரை மருத்துவம், இயற்பியல்,வேதியியல் ஆகிய துறைகளுக்கான பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மருத்துவத்துக்கான பரிசு எம்ஆர்என்ஏ (messenger RNA) கோவிட் 19 தடுப்பூசி உருவாக்கத்திற்கான அடிப்படையாகக் கருதப்படும் நியூக்லியோசைடின் மாற்றம் குறித்த கண்டுபிடிப்புக்காக கடாலின் கரிகோ மற்றும் ட்ரூவ் வைஸ்மேன் இருவருக்கும் கூட்டாக வழங்கப்படுகிறது. இதனை அக்.2ம் தேதி ஸ்வீடிஷ் அகாடமி அறிவித்தது.
இயற்பியலுகான நோபல் பரிசுக்கு விஞ்ஞானிகளான பியரி அகோஸ்தினி, ஃபெரெங்க் க்ரவுஸ் மற்றும் அன்னி எல் ஹூலியர் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பொருளில் எலக்ட்ரான் இயக்கவியல் ஆய்வுக்காக ஒளியில் அட்டோசெகன்ட் அதிர்வுகளை உருவாக்கும் சோதனை முறைக்காக வழங்கப்படுகிறது.
வேதியியலுக்கான நோபல் பரிசு குவாண்டம் புள்ளிகளை கண்டறிந்து தொகுத்ததற்காக பிரான்சின் பாரிஸ் நகரில் பிறந்து அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றும் மவுங்கி பவெண்டி, அமெரிக்காவின் கிளவ்லேண்டு நகரில் பிறந்து நியூயார்க்கின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றும் லூயிஸ் புரூஸ், ரஷ்யாவில் பிறந்து அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள நானோகிரிஸ்டல்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தின் முன்னாள் தலைமை விஞ்ஞானியாக பணியாற்றிய அலெக்சி எகிமோவ் ஆகியோர் வழங்கப்பட இருக்கிறது. இன்னும் அமைதிக்கான நோபல் பரிசு நாளையும், பொருளாதாரத்துக்கான பரிசு அக்.9-ம் தேதியும் அறிவிக்கப்பட இருக்கிறது.
கடந்த 1896-ஆம் ஆண்டு மறைந்த ஸ்வீடனைச் சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரட் நோபலின் உயிலின்படி பெறப்பட்ட 11 மில்லியன் ஸ்வீடிஸ் குரோனார் (1 மில்லியன் டாலர்) பரிசுத் தொகையைக் கொண்டது. இந்தாண்டு ஸ்வீடிஸ் குரோனார்களின் மதிப்பு வீழ்ச்சியடைந்தைத் தொடர்ந்து பரிசுத்தொகை 1 மில்லியன் குரோனார்கள் உயர்த்தப்பட்டுள்ளன.
ஆல்பரட் நோபலின் நினைவு தினமான டிசம்பர் 10-ஆம் தேதி நடைபெறும் விழாவில் தேர்வு பெற்றவர்கள் பரிசு பெற அழைக்கப்படுவார்கள். இதில் நோபலின் விருப்பப்படி, அமைதிக்கான பரிசு மட்டும் ஒஸ்லோவில் வைத்து வழங்கப்படுகிறது. மற்ற பரிசுகள் ஸ்டாக்ஹோமில் வைத்து நடைபெறும் விழாவில் வழங்கப்படுகின்றன.