இலங்கையின் கடன் சுமையில் ஒரு டொலரேனும் குறையவில்லை

66 0

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவியால் இலங்கையின் கடன் சுமையில் ஒரு டொலரேனும் குறையவில்லை என தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சுங்க கட்டளை சட்டம் மீதான தீர்மானம் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்,

உலக வங்கியைச் சேர்ந்த ஒருவர் நாட்டின் பொருளாதாரம் சிறப்பாக உள்ளது என்று கூறினாராம். அப்படியென்றால் அவர் மனநலம் பாதிக்ககப்பட்டவராக இருக்கலாம். நாட்டில் பண வீக்கம் 70 வீதமாக இருக்கும் போது 12 ரூபாவுக்கு இருந்த முட்டை விலை இப்போது பண வீக்கம் குறைவடைந்துள்ள போதும் 45 ரூபாவுக்கு இருக்கின்றது. இவ்வாறு பொருளாதாரம் வீழ்ந்துள்ள நேரத்தில் எப்படி பொருளாதாரம் உயர்ந்துள்ளது என்று கூற முடியும்.

நாளுக்கு நாள் பொருட்களின் விலை அதிகரித்து செல்கிறது. எரிபொருள் விலை, எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது மீண்டும் மின்சார கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நாட்டின் பணவீக்கம் குறைந்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்து வருகிறது.

அத்துடன், நாட்டில் அனைத்து துறைகளும் வீழ்ச்சியடைந்துள்ளன. பொருளாதாரம் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தினால் கிடைத்த சலுகை என்ன? எமது கடன் குறைக்கப்பட்டதா? கடன் செலுத்தும் காலத்தில் மாற்றம் ஏற்பட்டதா? எமது கடன் சுமையில் ஒரு டொலரேனும் குறைக்கப்படவில்லை.

இந்த பொருளாதார நெருக்கடிகளை குறைக்க நாங்கள் நாட்டை பொறுப்பெற்க தயார். இதற்காக இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் எமது தலைவர் போட்டியிட்டார். ஆனால் நீங்கள்  ரணில் விக்ரமசிங்கவுக்கே வாக்களித்தீர்கள். எங்களால் முடியும் என்பதாலே நாங்கள் முன்வந்தோம். ஆனால் நீங்கள் தெரிவு செய்ய ரணில் விக்ரமசிங்கவுக்கு நாணய நிதியத்தின் இரண்டாம் கட்ட கடன் உதவியையாவது பெற்றுக்கொள்ள முடிந்துள்ளதா?.

பல சட்டங்களை இந்த சபையில் நிறைவேற்றிக்கொண்டீர்கள் எந்த சட்டமூலத்தை கொண்டு வந்து, எந்த சட்டத்தை செயற்படுத்தினாலும் மத்திய வங்கி திருடனை பிடிக்கவில்லையே. முக்கிய தொழிற்துறையை சேர்ந்தவர்கள் நாட்டை விட்டு செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

எனவே, மக்கள் எதிர்பார்க்கும் அரசியல் மாற்றங்கள் நடக்கவில்லை. இன்னும் பாடங்களை நீங்கள் கற்றுக்கொள்ளவில்லை. முன்னர் செய்த தவறுகளையே செய்கின்றீர்கள். இதனால் உங்களை மக்கள் வெறுக்கின்றனர். என்றார்.