தமிழ்மக்களுக்கு அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு வழங்கப்படுவதற்கு ஆதாரவாகவே தாம் செயற்பட்டுவருவதாகவும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையிலும் இணையனுசரணை நாடுகளுக்குத் தாமே தலைமைதாங்குவதாகவும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பற்ரிக் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தனிடம் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அன்ட்ரூ பற்ரிக் மற்றும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை கொழும்பில் நடைபெற்றது. இச்சந்திப்பில் கட்சியின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனும் பங்கேற்றிருந்தார்.
இச்சந்திப்பில் நாட்டின் தற்போதைய நிலைவரம் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக 1948 இல் பிரித்தானியாவிடமிருந்து இலங்கை சுதந்திரமடைந்தபோது பிரித்தானியாவால் விட்டுச்செல்லப்பட்ட ஆட்சிமுறையே இலங்கையில் இன்னமும் நடைமுறையில் இருப்பதாகவும், இருப்பினும் பிரித்தானியாவில் காலவோட்டத்துக்கு ஏற்ப அதன் ஆட்சிமுறையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பற்ரிக்கிடம் இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டினார்.
அதுமாத்திரமன்றி பிரித்தானியா விட்டுச்சென்ற ஆட்சிமுறைமையின் விளைவாகவே தற்போது தாம் ஒற்றையாட்சியின்கீழ் இருக்கவேண்டியிருப்பதாகக் குறிப்பிட்ட சம்பந்தன், எனவே தமிழர்கள் விரும்புகின்ற அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வைப் பெற்றுக்கொடுக்கவேண்டிய பொறுப்பு பிரித்தானியாவுக்கு இருப்பதாக தெரிவித்தார்.
அதற்குப் பதிலளித்த பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பற்ரிக், அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு வழங்கப்படுவதற்கு ஆதரவாகவே தாம் செயற்பட்டுவருவதாகக் குறிப்பிட்டதுடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் இயங்கிவரும் இணையனுசரணை நாடுகளுக்கும் பிரித்தானியாவே தலைமைதாங்குவதாகச் சுட்டிக்காட்டினார்.
மேலும் இச்சந்திப்பின்போது இலங்கையின் வட, கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்றுவரும் நில அபகரிப்புக்கள், பௌத்த – சிங்கள மயமாக்கம், இந்துக்களின் வழிபாட்டுத்தலங்கள் அழிக்கப்பட்டு பௌத்த விகாரைகள் நிறுவப்படல் உள்ளிட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும் உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பற்ரிக்கிடம் எடுத்துரைக்கப்பட்டது.
அவற்றை செவிமடுத்த உயர்ஸ்தானிகர், இவை பற்றி தனக்கு ஏற்கனவே அறியத்தரப்பட்டிருப்பதாகவும், இவ்விடயங்கள் தொடர்பில் தாம் அவதானம் செலுத்திவருவதாகவும் தெரிவித்தார்.