சென்னை மற்றும் கரூர் அருகே கைதான பெண் மாவோயிஸ்டுகளிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வனப்பகுதியில் கடந்த 2002-ம் ஆண்டு ஆயுதபயிற்சியில் ஈடுபட்ட மாவோயிஸ்ட் தீவிரவாதிகளை கியூபிரிவு போலீசார் கைது செய்ய முயன்றனர்.அப்போது இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் மாவோயிஸ்ட் சிவா என்கிற பார்த்திபன் சுட்டு கொலை செய்யப்பட்டார். 29 மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.சில மாவோயிஸ்ட்கள் சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடி விட்டனர். அவர்களை கண்டறிந்து கைது செய்ய கியூ பிரிவு போலீ சார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர்.
இதன் காரணமாக சென்னை அம்பத்தூரில் தலைமறைவு வாழ்க்கை நடத்தி வந்த மாவோயிஸ்ட் இயக்கத்தின் முக்கிய நிர்வாகி விவேக் 2 ஆண்டுகளுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் அந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று கரூரில் சந்திரா (வயது 45), கலா (50) என்ற பெண் மாவோயிஸ்டுகளை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் சென்னை புறநகர் பகுதியான மணிமங்கலம் அருகே உள்ள எருமையூரில் மாவோயிஸ்ட்டுகள் பதுங்கியிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அந்த பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகப்படும் வகையில் அங்குள்ள வீட்டில் பெண் ஒருவர் தங்கியிருந்து, கல்குவாரி ஒன்றில் வேலை செய்வது தெரிய வந்தது. அவர் குறித்து விசாரிக்கும் போது, அவர் தலைமறைவாக இருந்த பெண் மாவோயிஸ்ட் ரீட்டா ஜாய்ஸ்மேரி (42) என்பது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து அவரையும் போலீசார் கைது செய்தனர். அவரை காஞ்சிபுரம் கொண்டு வந்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். விடிய விடிய நடந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது.இன்று அதிகாலை அவரை சென்னை கியூ பிராஞ்ச் அலுவலகத்திற்கு போலீசார் அழைத்து சென்றனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
கைதான ரீடாமேரியின் சொந்த ஊர் மதுரை கோரிபாளையம் ஆகும். கடந்த 2002-ம் ஆண்டு சேலம் மாவட்டம் ஊத்தங்கரையில் போலீசாருடன் நடந்த துப்பாக்கி சண்டையில் ரீடாமேரியும் அவரது கணவர் கண்ணனும் தொடர்புடையவர்கள்.கண்ணன் ஏற்கனவே கைது செய்யப்பட்டு தற்போது பாளையங்கோட்டை சிறையில் உள்ளார். தற்போது ரீடாமேரி போலீசில் சிக்கி இருக்கிறார்.
அவர் வேறு ஏதேனும் திட்டத்துடன் காஞ்சிபுரம் மாவட்டத்திற்குள் ஊடூருவினாரா? அவருடன் தொடர்புடையவர்கள் யார்? யார்? என்ற விவரத்தை போலீசார் சேகரத்து வருகிறார்கள்.மேலும் கரூரில் கைது செய்யப்பட்ட சந்திரா, கலா ஆகியோர் பற்றி பரபரப்பு தகவல் கிடைத்தது.
கடந்த 6 மாதங்களாக கரூர் வெங்கமேடு கணக்குப் பிள்ளை தெருவில் உள்ள ஒரு வாடகை வீட்டில் 2 பேரும் வசித்து வந்துள்ளனர். அங்குள்ள ஜவுளி நிறுவனத்திலும் வேலை பார்த்து வந்துள்ளனர். அப்பகுதி பொதுமக்களிடம் தங்களது சொந்த ஊர் திண்டுக்கல் என்றும், நேரம் சரியில்லாத காரணமாக இங்கு வந்து வசிக்கிறோம் என்று கூறியுள்ளனர்.
தினமும் காலையில் வேலைக்கு செல்லும் அவர்கள் இரவுதான் வீடு திரும்புவார்கள். அப்போது சமைக்க தேவையான காய்கறிகள் மற்றும் பல்வேறு பொருட்களை வாங்கி வருவார்கள். வீட்டிற்கு வந்ததும் கதவை உள்பக்கமாக பூட்டி விடுவார்கள். அப்பகுதியை சேர்ந்த யாரிடமும் சரியாக பேச மாட்டார்கள். மேலும் 10 நாள்களுக்கு ஒருமுறை ஒருவர் விட்டு ஒருவர் வெளியூர் சென்று விடுவார்கள்.
இது பற்றி யாராவது கேட்டால், கணவருக்கு உடம்பு சரியில்லை, உறவினருக்கு உடல்நிலை சரியில்லை. அவர்களை பார்த்து விட்டு வருகிறோம் என்று கூறி வந்துள்ளனர். மேலும் தங்களது உண்மையான பெயரை கூறாமல் வேறு பெயர்களை கூறி வசித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று பகலில் சந்திரா மட்டும் வீட்டில் இருந்தார். கலா வேலைக்கு சென்றிருந்தார். போலீசார் வீட்டிற்கு சென்ற தும் சந்திராவிடம் விசாரணை நடத்த தொடங்கினர். விசாரணைக்கு மறுத்த அவர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தோடு, திடீரென கையில் வைத்திருந்த ஒரு பேப்பரை வாயில் போட்டு விழுங்க முயன்றார். அதிர்ச்சியடைந்த போலீசார் பேப்பரை விழுங்காதவாறு தடுத்து நிறுத்தினர்.
பின்னர் விசாரணைக்கு போலீசார் அழைத்த போது, உடை மாற்றி விட்டு வருகிறேன். எனவே நீங்கள் வெளியே செல்லுங்கள் என்று கூறியுள்ளார். ஆனால் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு விடுவாரோ? என்று எண்ணிய போலீசார் அங்கிருந்து செல்லவில்லை. இதையடுத்து அவரை கைது செய்து போலீசார் வேனில் ஏற்றிய போது, தொழிலாளர் சங்கம் வாழ்க, போலீஸ் அராஜகம் ஒழிக என்று கோஷமிட்டபடி வேனில் ஏறினார்.
இதனிடையே வேலைக்கு சென்றிருந்த கலாவுக்கு சந்திரா கைது செய்யப்பட்ட தகவல் தெரியவில்லை. இந்நிலையில் இரவு அவர் வீட்டிற்கு தேவையான காய்கறிகள் வாங்கி கொண்டு வந்தபோது, அங்கு மறைந்திருந்த போலீசார் அவரை கைது செய்தனர். தங்கள் பகுதியில் மாவோயிஸ்டுகள் வசித்து வந்ததை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
கைதான பெண் மாவோயிஸ்டுகள் இருவரையும் கரூர் தான்தோன்றிமலை கியூ பிராஞ்ச் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். அவர்கள் இருவரிடமும் விடிய, விடிய சென்னை மற்றும் கோவை கியூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.சந்திரா விழுங்க முயன்ற பேப்பரில் ஏதாவது முக்கிய தகவல் இருக்கலாம் என தெரிகிறது. அது தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் மேலும் பரபரப்பு தகவல் வெளியாகும் என தெரிகிறது.