முல்லத்தீவு நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக நீதிகோரி மட்டக்களப்பு சட்டத்தரணிகள் சங்கம் இன்று செவ்வாய்க்கிழமை (3) பணிபுறக்கணிப்புடன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜாக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக நீதிகோரி மட்டக்களப்பு சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் சிரேஸ்ட சட்டத்தரணி பி.பிறோமநாத் பணிப்புறக்கணிப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்ததையடுத்து இன்றைய தினம் காலை 10 மணிக்கு மட்டு நீதிமன்ற கட்டிடத்தொகுதிக்கு முன்னால் சட்டத்தரணிகள் ஒன்றிணைந்தனர்.
இதில் நீதித்துறை சுதந்திரத்திற்காய் குரல் கொடுப்போம்,சட்டத்தின் முன் யாவரும் சமம், நீதிதுறையை அச்சுறுத்தாதே,பாரபட்சமற்ற விசாரணை வேண்டும். சுதந்திரத்தில் தலையிடாதே போன்ற சுலோகங்கள் ஏந்தியவாறு சுமார் ஒரு மணித்தியாலம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேவேளை, மாவட்டத்திலுள்ள வாழைச்சேனை மாவட்ட நீதிமன்றம், ஏறாவூர் சுற்றுவலா நீதிமன்றம், களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்றம், மட்டக்களப்பு நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் உள்ள உயர்நீதிமன்றம், மேல்முறையீட்டு நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம் நீதவான் நீதிமன்றம், தொழிலாளர் நியாயசபை நீதிமன்றம் உட்பட 8 நீதிமன்றங்கள் சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பால் செயலிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.