இரவு விடுதி போன்ற அமைப்பைக் கொண்ட 25 சிறப்பு சுற்றுலா பஸ்களுக்கு தற்காலிகத் தடை

82 0

இரவு விடுதி போன்ற அமைப்பைக் கொண்ட மற்றும் தடை செய்யப்பட்ட உபகரணங்களை பயன்படுத்தி மாற்றியமைத்து போக்குவரத்து கடமைகளில் ஈடுபடுத்தப்பட்ட 25 சிறப்பு சுற்றுலா பஸ்களின் போக்குவரத்து உரிமங்கள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளன.

மேலும், போக்குவரத்து விதிமுறைகளுக்கமைய அவை மீளவும் உரிய முறையில் தயார்ப்படுத்தப்படும் வரை அவற்றை போக்குவரத்து நடவடிக்கைகளில் ஈடுபடுத்த  தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி  நிஹால் தல்துவ தெரிவித்தார்.

கடந்த மாதம் பொலன்னறுவை, புலஸ்திபுர பகுதியில் ஆபத்தான மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் சில பஸ் வண்டிகள் செலுத்தப்பட்டதாக பொதுமக்களிடமிருந்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதுடன் குறித்த பஸ்கள் பாதுகாப்பற்ற முறையில் வீதியில் பயணிக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விசாரணைகளின் பின்னர்  குறித்த பஸ்களின் உரிமையாளர்கள் சாரதிகள் மற்றும் உதவியாளர்களை அடையாளம் காண 54 பஸ்கள்நேற்று திங்கட்கிழமை கொழும்புக்கு வரழைக்கப்பட்டதுடன்,  அவற்றை மோட்டார் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகளுடன் இணைந்து பொலிஸார்  சோதனைக்குட்படுத்தினர்.

அவற்றில் 25 பஸ்கள் வாடகைக்கு சுற்றுலா பயணிகளுக்கு  பெற்றுக்கொடுக்கப்படுகின்றது என்பதுடன், சட்டவிரோதமான முறையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வகையில் மின்விளக்குகளின் மின் உபகரணங்கள் மற்றும் கண்கவர் அலங்கார பொருட்களை கொண்டு இரவு விடுதி போன்ற அமைப்பைக் போன்று  சோடிக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

முற்று முழுவதுமாக போக்குவரத்து விதிமுறைகளை மீறி, பாதுகாப்பற்ற முறையிலும், பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்ககூடிய வகையிலும் அவை காணப்படுவதாக அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.

இந்நிலையில், குறித்த பஸ்களை சட்ட விதிமுறைகளுக்கு அமைய மாற்றியமைக்கும் வரையில் போக்குவரத்து கடமைகளில் ஈடுபடுத்த தற்காலிக தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பற்ற முறையில் வாகனம் செலுத்திய சாரதிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.