கடந்த செப்டெம்பர் மாதம் 20ஆம் திகதி அவிசாவளை தல்துவ பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றின் ஊடகவியலாளர் உட்பட 4 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக ஊடகவியலாளரின் மனைவி செப்டம்பர் 24 ஆம் திகதி தனது கணவர் திடீரென காணாமல் போனதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார்.
குற்றவாளியான மன்னா ரமேஷுக்கு ஊடகவியலாளர் தகவல்களைப் பகிர்வதன் மூலம் உதவியதாக பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்ததாகவும் அவர் கைது செய்யப்பட்டதை அவரது குடும்பத்தினருக்கு பொலிஸார் தெரிவிக்கவில்லை எனவும் அது குறித்த தகவலை ஊடகங்களுக்கு வழங்கியதாகவும் ஊடகவியலாளரின் மனைவி முறைப்பாடு செய்துள்ளார்.
தனது கணவர் அவிசாவளை பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்த அவர், அவருக்கு சட்ட உதவிகளை வழங்குவதற்கு தனது சட்டத்தரணிகளுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை எனவும் அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்தி தடுப்புக் காவலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
குறித்த முறைப்பாட்டில் தனது கணவர் சட்டவிரோதமான முறையில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இந்தச் செயலில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் ஊடகவியலாளரின் மனைவி கோரிக்கை விடுத்துள்ளார்.