அம்மா வாரச்சந்தையை சென்னை பெருநகர மக்கள் அனைவரும் பயன் பெற வேண்டும் என்பதற்காக 7 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு அங்கு கடைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன. சென்னையில் அம்மா வாரச்சந்தை அமைக்கப்படும் என்று 2014-15 மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த மேயர் சைதை துரைசாமி தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார்.ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்தில் அம்மா வாரச்சந்தை அமைக்கப்படுகிறது. இந்த சந்தையில் விற்கப்படும் ஒவ்வொரு பொருளும் உற்பத்தியாளர்களிடம் இருந்து நேரடியாக பொதுமக்களுக்கு கிடைக்க ஏற்பாடு செய்யப்படுகிறது. இடைத்தரகர்களுக்கு இதில் இடமே இல்லை.
உற்பத்தியாளர்களுக்கும், நுகர்வோர்களுக்கும் இடையில் இடைத்தரகர்கள் இல்லாததால் வெளி மார்க்கெட்டை விட 50 சதவீதம் குறைவாக ஒவ்வொரு பொருளும் விற்கப்பட உள்ளன.அம்மா வாரச்சந்தையில் 40-க்கும் மேற்பட்ட அரசு துறைகள் சார்பாக 155 வகைகளுக்கு மேலான 650-க்கும் மேற்பட்ட பொருட்கள் விற்கப்படும்.
மளிகை பொருட்கள், காய்கறிகள், எலக்ட்ரானிக் பொருட்கள், எலக்ட்ரிக்கல், அழகு சாதன பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், பர்னிச்சர்கள், இறைச்சி கடைகள் என குண்டூசி முதல் குளு குளு ‘ஏ.சி.’ வரை அனைத்து பொருட்களும் விற்க திட்டமிடப்பட்டுள்ளது.
அம்மா வாரச்சந்தையை சென்னை பெருநகர மக்கள் அனைவரும் பயன் பெற வேண்டும் என்பதற்காக 7 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு அங்கு கடைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன.தேர்வு செய்யப்பட்டுள்ள 7 இடங்களிலும் வெவ்வேறு நாட்கள் வாரச்சந்தை நடைபெறும். வாரத்தின் 7 நாட்களிலும் அம்மா வாரச்சசந்தை நடைபெற வேண்டும் என்ற நோக்கத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
பொதுமக்கள் வாகனங்களில் வந்து செல்ல வசதியாக விசாலமான இடங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன.ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் கூடும் முக்கிய சுற்றுலா தலமான மெரினா கடற்கரையில் அம்மா வாரச்சந்தை நடைபெற உள்ளது.
ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை அங்கு வாரச்சந்தை செயல்படும், அது போல திங்கட்கிழமை- ஆர்.கே.நகர், செவ்வாய் கிழமை-தரமணி, புதன்கிழமை-வளரசவாக்கம், வியாழக்கிழமை-அரும்பாக்கம், வெள்ளிக்கிழமை- மிண்ட் மேம்பாலம் அருகில், சனிக்கிழமை- அசோக்நகர் ஆகிய இடங்களில் வாரச் சந்தை நடைபெறும்.
வாரச்சந்தையில் 200 கடைகள் இடம் பெறுகின்றன. ஒவ்வொரு கடையும் நல்ல இடைவெளி விட்டு அமைக்கப்படுகிறது.அம்மா வாரச்சந்தையில் கடைகள் வைக்க பல்வேறு நிறுவனங்கள் போட்டி போடுகின்றன. உள்நாட்டில் உள்ள பெரிய நிறுவனங்கள் மட்டுமின்றி பன்னாட்டு நிறுவனங்களும் வாரச்சந்தையில் இடம் பிடிக்கின்றன.மேலும் 45 வங்கிகளின் கடன் உதவி பெற்ற தொழில் நிறுவனங்களும், தொழில் முனைவோர்களும் இந்த சந்தையில் கடைகளை திறக்க ஆர்வம் காட்டுகிறார்கள்.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், நரிக்குறவர்கள் விற்கும் பாசி மணி முதல் ஏ.சி. வரை ஒரே இடத்தில் கிடைக்கும். தரமான கம்பெனிகளின் பொருட்கள், பல்வேறு கட்டங்களாக இடைத்தரகர்கள் கை மாறி இறுதியில் நுகர்வோர் கைக்கு செல்கிறது.ஆனால் அம்மா வாரச்சந்தையில் விற்கப்படும் அனைத்து பொருட்களும் உற்பத்தியாளர்களிடம் இருந்து நேரடியாக பொதுமக்களுக்கு செல்கிறது. இதனால் 50 சதவீதம் வரை விலை குறைவாக பொருட்கள் கிடைக்கும்.
இந்த வாரச்சந்தை பொது மக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் திறக்கப்படும். அதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன என்றனர்.அம்மா வாரச்சந்தை உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக ஆகஸ்ட் மாதத்திற்குள் திறக்க வாய்ப்பு உள்ளது. இதனை முதல்-அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைப்பார் என்று எதிர் பார்க்கப்படுகிறது.