பள்ளிக் கல்வி அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி – உண்ணாவிரதம் தொடரும் என ஆசிரியர்கள் அறிவிப்பு

88 0

உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள், பள்ளிக் கல்வி அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் தோல்வி ஏற்பட்டதை தொடர்ந்து, உண்ணாவிரதம் தொடரும் என அறிவித்துள்ளனர்.

சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் (எஸ்எஸ்டிஏ) கடந்த செப்.28-ம் தேதி முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்த உண்ணாவிரதம் 5-வது நாளாக நேற்றும் தொடர்ந்தது. போராட்டம் நடைபெறும் இடத்தில் ஆசிரியர்கள் பந்தல்களை அமைத்து, இரவு பகலாக குழந்தைகளுடன் தங்கியுள்ளனர்.

இதுவரை 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயக்கமடைந்த நிலையில், அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அதேவேளையில் 22 ஆசிரியர்கள் போராட்டம் நடைபெறும் இடத்திலேயே சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உண்ணாவிரதம் குறித்து ஆசிரியர்கள் சங்கம், பள்ளிக் கல்வித்துறை உயர் அதிகாரிகள் இடையே இருமுறை பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்த நிலையில், 3-ம் கட்டமாக ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அழைப்பு விடுத்தார். இதில் எஸ்எஸ்டிஏ சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஜெ.ராபர்ட் உள்ளிட்ட 5 நிர்வாகிகள் பங்கேற்றனர்.

அப்போது, கோரிக்கைகள் தொடர்பாக கட்டாயம் முதல்வரின் கவனத்துக்கு எடுத்து சென்று விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாகவும், கொஞ்சம் அவகாசம் வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தாக ஜெ.ராபர்ட் கூறினார். அதேசமயம், ‘ஏற்கெனவே பல ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்தமுறை பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை. தமிழக அரசு சார்பில் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை குறிப்பிட்ட தேதிக்குள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்பு வந்தால் மட்டுமே உண்ணாவிரதத்தை கைவிடுவோம்,’ என்று ராபர்ட் தெரிவித்தார்.

தொடர்ந்து நேற்று இரவு ஆசிரியர்கள் அகிம்சை தீபம் ஏற்றி மகாத்மா காந்திக்கு மரியாதை செய்தனர். முன்னதாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஆசிரியர்களை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ்ப் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளர் வ.கவுதமன் உள்ளிட்டோர் சந்தித்து தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.