அரசு அளித்த வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க ஆளுக்கு ‘ரூ.2 நன்கொடை தாருங்களேன்’ என்று பாலம் கலியாணசுந்தரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அன்புப் பாலம் நிறுவனர் மற்றும் அன்புப் பாலம் மாத இதழ் ஆசிரியர், பதிப்பாசிரியர் பா.கலியாணசுந்தரம். இவர் 14-வது வயதில் 1953-ம் ஆண்டு சுதந்திர தினத்தன்று தனது சேவை நிறுவனத்தை தொடங்கினார். 70 ஆண்டுகளாக தன்னால் இயன்ற சேவையை மக்களுக்கு செய்து வருகிறார்.
அமெரிக்கா அவரது சேவையை பாராட்டி ஆயிரம் ஆண்டுகளில் சிறந்த மனிதர் என்ற உயரிய விருதை அளித்து கவுரவித்தது. ஐக்கிய நாடுகள் சபை 20-ம் நூற்றாண்டின் இணையற்ற சேவையாளர் என்ற விருது அளித்து பாராட்டியது.
இந்தியாவில் சமூக சேவைக்கு அரசு அளிக்கும் அங்கீகாரம் பத்மஸ்ரீ விருது வழங்கப்படுகிறது. மக்கள் சேவைக்கு தனியார் அளிக்கும் உயரிய மகுடம் விருதையும், பத்மஸ்ரீ விருதையும் ஒருங்கே பெற்ற முதல் இந்தியர் என்ற கவுரவத்தை பெற்றுள்ளார். இவருக்கு பாரத பிரதமர் விருந்தளித்து பாராட்டியுள்ளார்.
கல்லூரியில் நூலகராகப் பணியாற்றியபோது, பெற்ற ஊதியம், ஓய்வூதியம், குடும்பச் சொத்து, விருதுகள் வழியே கிடைத்தவை என அனைத்தையும் தொண்டு பணிக்கு வழங்கினார். பாலம் அமைப்பு வழியாக சமூக பொருளாதார மேம்பாட்டுக்காகவும், குழந்தைகளின் கல்வி மேம்பாட்டுக்காகவும் பணியாற்றி வருகிறார்.
பாலம் கலியாணசுந்தரத்தின் சேவையை பாராட்டி, அவரை கவுரவிக்கும் வகையில், தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள குடிசை மாற்று வாரியம் சார்பில் சென்னை திருமங்கலம் என்விஎன் நகர் திட்டப் பகுதியில் கட்டப்பட்டுள்ள குடியிருப்பில் தமிழக அரசு ஒரு வீடு அளித்துள்ளது.
அவ்வீட்டுக்கு தேவையான பொருட்களை, மக்கள் நன்கொடை மூலமாக வாங்க வேண்டும் என்பது பாலம் கலியாணசுந்தரத்தின் விருப்பமாகும். இதற்காக ஆளுக்கு ரூ.2 (ரூபாய் இரண்டு மட்டும்) நன்கொடை அளிக்க, மக்களுக்கு பாலம் கலியாணசுந்தரம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “2004-ம் ஆண்டு திருச்சி விஸ்வநாதன் மருத்துவமனையில் இருந்தபோது எனக்கு மருந்து செலவுக்காக மக்களிடம் ஒரு ரூபாய் நன்கொடை கொடுக்க வேண்டினேன். அதனால், பல்லாயிரக்கணக்கான மக்களின் ஆதரவை பெற்றேன். அதுபோல், தற்போது அரசு அளித்துள்ள வீட்டுக்கு தேவையான பொருட்களையும், மக்களின் எளிய நன்கொடை மூலம் வாங்க விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
ரூ.2 நன்கொடையை அவர் கணக்கு வைத்துள்ள பாங்க் ஆப் பரோடா அசோக் நகர் கிளையின் 75230100003506 என்ற வங்கி கணக்கில் செலுத்தலாம்.
மேலும் விபரங்களுக்கு பா.கலியாணசுந்தரத்தை 98402 18847 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.