யேர்மனி லூடன்சைட் நகரில் 01.10.2023 அன்று நடைபெற்ற தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் மற்றும் கேணல் சங்கர் ஆகியோரின் நினைவெழுச்சி நினைவு.

256 0

இந்திய அரசிடம் ஐந்து அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து 15.09.1987 தொடக்கம் 26.09.1987 வரை பன்னிரெண்டு நாட்கள் யாழ். நல்லூரில் நீராகாரம் அருந்தாமல் உண்ணாநிலைப் போராட்டம் நடாத்தி வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களதும் 26.09.2001 அன்று முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட கிளைமோர் தாக்குதலின் போது வீரச்சாவடைந்த தமிழீழ வான்படையின் சிறப்புத்தளபதி கேணல் சங்கர் ஆகியோரின் நினைவெழுச்சி நிகழ்வானது 01.10.2023 சனிக்கிழமை அன்று யேர்மனி லூடன்சைட் நகரில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்டது.

தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்வெழுச்சி நிகழ்வில் பொதுச்சுடரினை லூடன்சைட்நகரத் தேசியச் செயற்பாட்டாளர் அல்பிறேட் ரவீந்திரம் அவர்கள் ஏற்றி வைக்க தமிழீழத் தேசியக்கொடியினை மத்தியமாநிலம் 1 இன் பொறுப்பாளர் திரு. சின்னையா நாகேஸ்வரன் அவர்கள் ஏற்றிவைத்தார்.

தேசியக்கொடி ஏற்றிவைத்ததைத் தொடர்ந்து தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களுக்கான ஈகைச்சுடரினை மத்திய மாநிலம் 1 இன் துணைப் பொறுப்பாளர் திரு. சந்திரன் லதாகுமார் ஏற்றிவைக்க தமிழீழ வான்படையின் சிறப்புத் தளபதி கேணல் சங்கர் அவர்களுக்கான ஈகைச்சுடரினை மாவீரர் வில்லவன் அவர்களின் சகோதரர் ஏற்றிவைத்தார். தியாக தீபத்தின் திருவுருவப் படத்திற்கு நாட்டுப்பற்றாளர் பரராஜசிங்கம் அவர்களின் துணைவியாரும் அவரின் மகளும் மலர்மாலையை அணிவிக்க, கேணல் சங்கர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மனிதநேயச் செயற்பாட்டாளர் திரு. ராஜன் அவர்கள் அணிவித்தார் தொடர்ந்து அகவணக்கத்துடன் சுடர்வணக்கம், மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.

இவ்வெழுச்சி நிகழ்வில் நிகழ்வுகளாக வணக்கப்பாடல்கள், கவிவணக்கம், நினைவுரை, எழுச்சி நடனங்கள் என்பன இடம்பெற்றதுடன் காலத்திற்கேற்ப சிறப்புரையும் இடம்பெற்றது.  நிகழ்வின் இறுதியாக நம்புங்கள் தமிழீழம் பாடல் அனைவராலும் பாடப்பட்டதோடு தமிழீழத் தேசியக்கொடி கையேற்றலினைத் தொடர்ந்து தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் எழுச்சியுடன் நிறைவுபெற்றன.

தமிழீழ மாவீரர் பணிமனை
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – யேர்மனி