சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை முழுமையாக செயற்படுத்தினால் சமூக கட்டமைப்பில் அமைதியின்மை நிலவும். நாணய நிதியத்துடனான விவகாரத்தில் அரசாங்கம் தன்னிச்சையாக எடுத்த தீர்மானங்களினால் இன்று ஒட்டுமொத்த மக்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஆகவே, ஏற்றக்கொள்ளப்பட்ட நிபந்தனைகள் மறுசீரமைக்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள ஐக்கிய மக்கள் சக்தி காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
சிறுவர்களின் நலன் பேணுவதாக அரசாங்கம் குறிப்பிடுகிறது. ஆனால் நாட்டில் 52 சதவீதமான சிறுவர்கள் ஊட்டச்சத்துக் குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மந்த போசனையால் சிறுவர்கள் பாதிக்கப்படும் போது எதிர்கால தலைமுறை நலிவுற்றதாகவே அமையும்.
பொருளாதார பாதிப்பால் நடுத்தர குடும்பங்களின் சுகாதார நிலை மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.கொழும்பு நகர சபை முன்னெடுத்த ஆய்வுக்கு அமைய மந்த ஊட்டச்சத்து குறைவாக உள்ள நகரங்களின் பட்டியலில் கொழும்பு நகரம் முன்னிலையில் உள்ளது. இது ஆரோக்கியமானதொரு தரப்படுத்தலல்ல.
பொருளாதார நெருக்கடிக்கு சர்வதேச நாணய நிதியமே இறுதி தீர்வு என்ற நிலைப்பாட்டில் இருந்துக் கொண்டு அரசாங்கம் எடுத்த தீர்மானங்களினால் ஒட்டுமொத்த மக்களும் இன்று பாதிக்கப்பட்டுள்ளார்கள். நாணய நிதியம் முன்வைத்த சகல தீர்மானங்களையும் கண்மூடிக் கொண்டு அரசாங்கம் ஏற்றுக்கொண்டதன் விவைளை இன்று மக்கள் எதிர்கொண்டுள்ளார்கள்.
நாணய நிதியத்தின் வலியுறுத்தலுக்கு அமைய மின்சார கட்டணம் மீண்டும் உயர்வடையவுள்ளது. நாணய நிதியத்தின் நிபந்தனைகளை முழுமையாக அமுல்படுத்தினால் சமூக கட்டமைப்பில் அமைதின்மையே தோற்றம் பெறும். ஏற்றுக்கொள்ளப்பட்ட நிபந்தனைகள் குறித்து எதிர்தரப்புடன் அரசாங்கம் பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை.
ஏற்றுக்கொண்ட நிபந்தனைகளை அரசாங்கம் முழுமையாக அமுல்படுத்தவில்லை என சர்வதேச நாணய நிதியம் அதிருப்தி வெளியிட்டுள்ளது. நிபந்தனைகளை அமுல்படுத்தினால் மக்கள் போராட்டம் தோற்றம் பெறும். அது முழு நாட்டுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே ஏற்றுக்கொள்ளப்பட்ட நிபந்தனைகள் மீள் பரிசீலனை செய்யப்பட வேண்டும் என்றார்.