முல்லைத்தீவு நீதிபதி விவகாரம் – பிரதமநீதியரசர் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரை சந்தித்து விசாரணைகளை கோர இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் முடிவு

61 0

முல்லைத்தீவு நீதிபதி பதவி விலகியமைக்கான காரணங்கள் என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள்தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் பிரதம நீதியரசரையும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரையும் சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சந்திப்பின் போது இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சுயாதீன விசாரணைகளை கோரவுள்ளது.

பிரதமநீதியசரை இன்று காலை சந்தித்து இந்த விடயம் குறித்து ஆராய்வதற்கான  அனுமதி கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் தாங்கள் சுயாதீன விசாரணையை கோரும் கடிதமொன்றை  நீதியரசரிடமும் பொதுமக்கள் பாதுகாப்பு  அமைச்சரிடமும் வழங்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

விசாரணையை மேற்கொண்டு பொதுமக்களிற்கு விரைவில் விபரங்களை வெளியிடுமாறு கேட்டுக்கொள்ளவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

நீதவான் தனது உயிருக்கு ஆபத்து என குற்றச்சாட்டு முன்வைத்துள்ள பின்னணியிலும் ஊடகங்களில் குறிப்பாக சமூக ஊடகங்கள் பலவற்றில் அரசபுலனாய்வு பிரிவினர் அவரை கண்காணித்ததாக வெளியாகியுள்ள தகவல்களின் பின்னணியிலும் நாங்கள் இந்த விடயங்களை ஆராயவேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் கௌசல்ய நவரட்ண தெரிவித்துள்ளார்.

நீதவானின் பாதுகாப்பு குறைக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் வெளியாகியுள்ளன,நீதித்துறையினரை பொறுத்தவரை இவை கரிசனைக்குரிய விடயங்கள் இந்த குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யவேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம்,விசாரணைகளின் போது குற்றச்சாட்டுகள் உண்மை என உறுதியானால் இலங்கையில் நீதித்துறையின் சுதந்திரத்திற்கும  சட்டத்தின் ஆட்சிக்கும் இது ஆபத்தான விடயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.