ஆத்தூர் பகுதியில் ஏர் பூட்டி உழவு பணி மேற்கொள்ளும் விவசாயிகள்

120 0

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே ஆத்தூர், ராமநாதபுரம், தாதன்னூர் உள்ளிட்ட பகுதியில் இயற்கை விவசாயத்தை நம்பி உள்ள விவசாயிகள் பாரம்பரிய முறைப்படியே விவசாயம் செய்து வருகின்றனர்.

எவ்வளவு ரசாயன உரங்கள் மருந்துகள் இருந்தாலும் மண் வளம் கெடாமல் இருக்க இயற்கை உரங்களான மாட்டுச்சாணம், கண்மாய் கரம்பை எனப்படும் மண் வகைகளை நிலத்தில் போட்டு விவசாயம் செய்து வருகின்றனர்.

குறிப்பாக தாதன்னூரைச் சேர்ந்த விவசாயிகள் ராஜா, செல்வேந்திரன் ஆகியோர் ராமநாதபுரம் அருகே உள்ள தனது விவசாய நிலத்தில் மக்காச்சோளம் பயிரிடுவதற்காக மாடுகளை ஏர்பூட்டி உழுது வயல்களை தயார்படுத்தினர்.

இந்த வயல்களில் அதிகாலை நேரத்தில் சூரியன் உதிக்கும்போது வயலின் சனி மூலையில் பாரம்பரிய முறைப்படி தேங்காய், வாழைப்பழம், பத்தி சூடம், எலுமிச்சம் பழம், குங்குமம், சந்தனம், நிறை செம்பு தண்ணீர், கதம்பம் பூ வைத்து இயற்கை பகவானை வழிபட்டு குடும்பப் பெண்கள் குலவையிட்டு ஏர்பூட்டி உழவில் ஈடுபடும் நாட்டு மாடுகளுக்கு கொம்பில் சந்தனம், குங்குமம் மற்றும் கதம்பம் பூ வைத்து மாட்டை தொட்டு வணங்கி விளைச்சல் சிறப்பாக இருக்க வேண்டும் என பூமியை தொட்டு வணங்கி ஏர் பூட்டி உழவை தொடங்கினர்.

இந்தப் பணிக்காக ஒரு ஏர் உழவனுக்கு ரூ.1350 கூலியாக கொடுக்கப்படுகிறது. மேலும் உழவுக்கு பின்னால் விதை போட்டுக்கொண்டு செல்லும் பெண்களுக்கு ரூ.350 கூலி வழங்கப்படுகிறது. டிராக்டர் மூலமாக ஒரு மணி நேரத்தில் உழவு செய்யும் நிலத்தில் 3 ஏர்பூட்டி 6 மணி நேரத்தில் உழவு செய்து வருகின்றனர்.

இந்த நவீன காலங்களிலும் ஒரு சில விவசாயிகள் பாரம்பரிய முறைப்படி ஏர் பூட்டி உழவு செய்து விவசாய பணிகளில் ஈடுபட்டு வருவது பொதுமக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.இதுகுறித்து விவசாயி செல்வேந்திரன் கூறுகையில், நவீன வசதிகள் இருந்தாலும் செயற்கை உரங்கள் மருந்துகள் இருந்தாலும் நான் இயற்கையை நம்பி இயற்கை விவசாயம் செய்து வருகிறேன். இதனால் மண் வளம் கெடாமல் இருக்கும். நல்ல விளைச்சல் கிடைக்கும். இதுபோன்று விவசாயம் செய்வது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.