யேர்மனி ஸ்ருட்காட் நகரில் நடைபெற்ற தியாகதீபம் லெப் கேணல் திலீபனுடைய 36 ஆவது நினைவு வணக்க நிகழ்வு.

1572 0

1.10.2023 சனிக்கிழமை இன்று யேர்மனி ஸ்ருட்காட் நகரினில் தியாக தீபம் லெப். கேணல் திலீபன் மற்றும் தமிழீழத்தின் விமானப்படைத் தளபதி கேணல் சங்கர் அவர்களுடைய நினைவு வணக்க நிகழ்வு மிகச்சிறப்பாக நடைபெற்றது. மண்டபம் நிறைந்த மக்களுடன் தியாகதீபத்தின் வணக்க நிகழ்வு பொதுச்சுடர் ஏற்றலுடன் ஆரம்பமானது.

பின்பு தமிழீழத் தேசியக்கொடி ஏற்றிவைக்கப்பட்டு திலீபனுக்கும், கேணல் சங்ர் அவர்களுக்கும்; ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு திருவுருவப்படத்திற்கு மலர்மாலையும் அணிவிக்கப்பட்டது. வருகைதந்திருந்த மக்கள் சுடர் ஏற்றி மலர் தூவி தங்கள் வணக்கங்களைச் செலுத்திய பின்பு அகவணக்கத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமானது.

முதல் நிகழ்வாக இசைவணக்கம் இடம்பெற்றது. நீண்ட கால இடைவெளிக்குப்பின் வாத்தியக் கலைஞர்களின் மெருகூட்டலுடன் விடுதலைக் கானங்களை இசைத்த இளையவர்களும்,அவர்களை உருவாக்கியவர்களும் இணைந்து தந்த கானங்கள் பார்வையாளர்களை யேர்மனியின் ஆரம்பகால விடுதலை மேடைகளுக்கு அழைத்துச் சென்றது.

தொடர்ந்து விடுதலை நடனங்களும்,கவியரங்கங்களும் தமிழ் இளையோர் அமைப்பினரால் நடாத்தப்பட்ட நாடகமும் சிந்தனைகளைத் தூண்டும் விதத்தில் அமைந்திருந்தது. இறுதியாக நாட்டியத் தொகுப்பு அற்புதமாக அமைந்தது. தியாகதீபத்தின் அர்ப்பணிப்பைப் பறைசாற்றும் பாடல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அமைந்த நடனங்கள் அனைத்து மக்களையும் தியாகதீபத்தின் வேள்விக்குள் இழுத்துச் சென்றது.

இறுதியில் தேசியக் கொடி இறக்கிவைக்கப்பட்டு நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற நம்பிக்கைப் பாடலுடன் நிகழ்வுகள் நிறைவடைந்தன.