ஜேர்மனியில் புலம்பெயர்ந்தோர் உல்லாசமாக வாழ்வதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ள விடயம் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.ஜேர்மனியின் எதிர்க்கட்சித் தலைவரான Friedrich Merz, ஜேர்மனியில் புலம்பெயர்ந்தோர் உல்லாசமாக வாழ்வதாக தெரிவித்துள்ள விடயம் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. இப்படி சர்ச்சைக்குரிய விதத்தில் அவர் அகதிகளை விமர்சிப்பது, இது முதல் முறையல்ல.
இம்முறை, புகலிடம் நிராகரிக்கப்பட்ட 300,000 பேர் தங்கள் நாடுகளுக்குத் திரும்பாமல் ஜேர்மனியில் தங்கிவிட்டதாகவும், அவர்களுக்கு ஜேர்மனியில் நல்ல மருத்துவ வசதிகள் இலவசமாக கிடைக்கும் நிலையில், அவர்கள் மருத்துவர்களிடம் சென்று உட்கார்ந்துகொள்வதால், ஜேர்மன் மக்களுக்கு சிகிச்சை பெற வாய்ப்புக் கிடைப்பதில்லை என்றும் கூறியுள்ளார் Friedrich Merz.
Friedrich Merzஇன் கூற்றுக்களுக்கு மருத்துவர்கள் மற்றும் அகதிகள் ஆதரவு அமைப்புகள் மறுப்பு தெரிவித்துள்ளன.
புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு அவசரமாக தேவைப்படும் மருத்துவ மற்றும் பல் மருத்துவ சிகிச்சைகளே கிடைப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
அதுபோல, முதலில் புகலிடக்கோரிக்கையாளர்கள் கொட்டகை போன்ற இடங்களில், ஒரே கூரையின் கீழ் நூற்றுக்கணக்கானோர் தங்கவைக்கப்படுகிறார்கள். அவர்கள் எங்கும் செல்லமுடியாது, வேலைக்கு செல்லக்கூடாது, ஜேர்மன் மொழி வகுப்புகளில் கலந்துகொள்ளவும் அவர்களுக்கு அனுமதி இல்லை.
உணவு உடை போன்ற அடிப்படைத் தேவைகளுடன், தனி நபர்களுக்கு மாதம் ஒன்றிற்கு சுமார் 150 யூரோக்களும், உணவு, உடை வழங்கப்படாவிட்டால், மாதம் ஒன்றிற்கு சுமார் 367 யூரோக்களும் மட்டுமே அவர்களுக்கு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.