இலங்கை அரசாங்கத்தின் வனவளத்திணைக்களம், படையினர், வனஜீவராசிகள் திணைக்களம் எமது மக்கள் மீது பயங்கரவாத நடவடிக்கையினை உளவியல் ரீதியாக மேற்கொண்டு வருகின்றார்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு முள்ளியவளைப்பகுதியில் இன்று (01.10.2023 ) நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
முல்லைத்தீவு மாவட்டத்தில் நீதி செத்துக்கிடக்கின்றது. முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி உளவியல் பயங்கரவாத தாக்குதலுக்கு உட்பட்டு நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
சிங்கள அரசு தமிழ்மக்கள் மீதும் தொடர்ச்சியாக காலத்திற்கு காலம் உளவியல் ரீதியான தாக்குதலைத்தான் மேற்கொண்டு வருகின்றது. தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களம் நாடாளுமன்றில் பெரும்பான்மையினை வைத்து நிறைவேற்றி விட்டு எமது மக்கள் மீது தங்கள் உளவியல் பயங்கரவாதத்தினை மேற்கொண்டு வந்திருந்தார்கள்.
அதேபோல்தான் வனவளத்திணைக்களம், படையினர், வனஜீவராசிகள் திணைக்களம் எமது மக்கள் மீது பயங்கரவாத நடவடிக்கையினை உளவியல் ரீதியாக மேற்கொண்டு வருகின்றார்கள்.
நீதிபதி தமிழ் மக்களுக்கான ஆதரவினை வழங்கியதை எதிர்த்து சிங்கள தேசத்தில் இனவாதிகள் நீதிபதிக்கு எதிராக கடும் உளவியல் தாக்குதல்களை மேற்கொண்டு அவராகவே நாட்டைவிட்டு வெளியேறி ஓடச் செய்திருக்கின்றனர்.
இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். இதன் விளைவினை ஐ.நா சபையில் இலங்கை தேசம் சந்திக்கும். கடந்த காலங்களில் நில ஆக்கிரமிப்புக்கு எதிராக நாங்கள் ஐ.நா சபை வரை கொண்டுசென்று சேர்த்துள்ளோம்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் எங்க பார்த்தாலும் ஒவ்வொரு பிரச்சினைகள் காட்டமாக நிறைவேறி வருகின்றது. தமிழர் விடுதலை போராட்டம் முடக்கப்பட்ட போது அதில் இருந்து மக்கள் மீண்டு எழுவதற்கு இந்த முல்லைத்தீவு மாவட்டம் தான் உதவி செய்தது.
யாழ். இடப்பெயர்வின்போது மக்கள் வந்து தஞ்சம் அடைந்தது விடுதலை போராட்டங்களை வழிநடத்தியது இந்த முல்லைத்தீவு மாவட்டம். பின்னர் காணி விடுவிப்பு போராட்டத்தை ஐ.நா வரை கொண்டு செல்வதற்கு இந்த மாவட்டத்தில் உள்ள மக்களின் போராட்ட வலிமைதான் காரணமாக இருந்தது. இப்போது நீதிபதி விடயத்தினை எமது மக்கள் கையில் எடுப்பார்கள். அப்போது இந்த சிங்களம் விழித்துக்கொள்ளும் என்று அவர் குறிப்பிட்டார்.