மின்சார சபை பேசாலை மக்களின் காணிகளை கையகப்படுத்துவதை உடன் நிறுத்த வேண்டும்

61 0

மன்னாரில் இலங்கை மின்சார சபை காற்றலை அமைக்கும் திட்டத்தை விரிவுபடுத்தும் நோக்குடன் மக்களின் காணிகளை, அவர்களின் சம்மதமின்றி தாங்கள் கையகப்படுத்துவதால் பேசாலை மக்கள் கடும் எதிர்ப்பைக் காட்டி வருகின்றனர்.

இதன் காரணமாக பேசாலை பங்குத் தந்தை அருட்பணி அன்ரன் அடிகளாரின் ஏற்பாட்டில் இலங்கை மின்சார சபை அதிகாரிகளுடன் பேசாலை பங்குத் தந்தை பணிமனையில் மன்னார் பிரஜைகள் குழு பங்களிப்புடன் பேசாலை மக்களுடனான விஷேட கலந்துரையாடல் இடம்பெற்றது.

 

இதன்போது மக்களால் இங்கு முன்வைக்கப்பட்ட கருத்துக்களாக மன்னார் மாவட்டத்தில் குறிப்பாக மன்னார் தீவில் அபிவிருத்தி என்ற போர்வையில் இன்று வீட்டு வாசல் வரையும் இவ்வாழ் மக்களை நசுக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

ஏற்கனவே மன்னார் தென் கடலோரப் பகுதியில் 100 மெஹா வோட் காற்றாலை மின் ஆலை அமைக்கப்பட்டுள்ளது.

இது இங்குள்ள மக்களின் எவ்வித ஆலோசனைகளும் இன்றியே அமைக்கப்பட்டுள்ளது.

இருந்தும் இக்காற்றாலை அமைக்கும் திட்டத்தை இவ்வாழ் மக்கள் எதிர்க்கவில்லை. இத்திட்டம் எமது நாட்டில் உருவாக வேண்டும் என்பதும் எங்கள் விருப்பமாகும்.

2019ஆம் ஆண்டு தொடக்கம் இப்பகுதியில் அதாவது பேசாலைப் பகுதியில் முதல் காற்றாலை அமைக்கப்பட்டுள்ளது. அன்று தொடக்கம் இன்று வரை இப்பகுதி மக்கள் வாழ்வாதார ரீதியாகவும் அனர்த்தம் ரீதியாகவும் பல பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

குறித்த பிரச்சனைகள் குறிப்பிட்ட அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டப்பட்ட போது கருணைமிக்க பதில்கள் மட்டும் எமக்கு கிடைக்கப்பட்டன. ஆனால் இதற்கான தீர்வுகள் அசமந்த போக்கிலே இருந்து வருகின்றன.

முன்னர் ஏற்படுத்தப்பட்ட காற்றாலைகளுக்கு 200 ஏக்கர் நிலங்கள் கையடக்கப்பட்டன. மன்னார் தீவு 5 கிலோ மீற்றர் அகலம் கொண்டவை.

இதற்குள் இரண்டு கிலோ மீற்றர் தூரத்துக்குள் இவ் காற்றாலைகள் அமைக்கப்படுவதால் அதாவது மக்கள் குடியிருக்கும் பகுதிக்குள் இவைகள் அமைக்கப்படுவதால் மக்கள் சொல்லொன்னா துன்பங்களுக்கு உள்ளாகும் நிலை உருவாகியுள்ளது.

அதுமட்டுமல்ல காணி உரிமையாளர்களின் எந்தவித சம்மதமும் இன்றி அவர்களின் காணிகள் தந்திர உபாயமாக அபகரிக்கப்பட்டும் வருகின்றது.

மன்னார் தீவில் தொடர்ந்து காற்றாலை அமைக்கும் பணிகள் தொடருமாகில் இத்தீவில் வாழும் மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறும் நிலையும் தற்பொழுது உருவாகியுள்ளது.

ஆகவே இது தொடர்பாக உயர் அதிகாரிகளை இங்கு அழைத்து வந்து சரியான முறையில் கலந்துரையாடாமல் தற்பொழுது விரிவுப்படுத்தும் வேலைத் திட்டங்களை உடன் நிறுத்துமாறு இம்மக்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.