நீதிபதிக்கே நீதிகோரும் அவலத்தில் தமிழினம்

143 0

முல்லைத்தீவு நீதிபதி திரு.சரவணராஜா அவர்களுக்கு வழங்கப்பட்ட அழுத்தம் மற்றும் அவரது பதவி விலகல் என்பவை, சிறீலங்காவின் நீதித்துறைக் கட்டமைப்புச் சுயாதீனமாக இல்லை என்பதை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.

அவர் ஞாயிற்றுக்கிழமை (01) வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவ் அறிக்கையில் மேலும் உள்ளதாவது,

சிறீலங்காவின் நீதித்துறை சிங்கள பெளத்த மேலாதிக்கத்திற்கும், அதே மேலாதிக்கத்தின் பெயரால் நாட்டை நாசம் செய்தவர்களையும் சூறையாடியவர்களையும் கொலையாளிகளையும் சுதந்திரமாக நடமாட வைத்துள்ள து.

இந்த விடயங்களை வெளிச்சம் போட்டுக்காட்டும் சம்பவமாக நீதிபதி திரு.சரவணராஜாவின் சுயாதீன செயற்பாட்டுக்கு இடையூறான சட்டமா அதிபரின் தலையீடு மற்றும் புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல்கள் அமைந்திருந்தன.

சிறீலங்காவின் நீதித்துறையில் அரசியல் தலையீடு, சிங்கள – பெளத்த தேசத்தின் நலன்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு செயற்பட்டு வருகின்றது.

இதன் காரணமாகவே சிறீலங்கா அரசால் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட இனவழிப்புக்கும்  நடைபெற்றுவரும் கட்டமைக்கப்பட்ட இனவழிப்புக்கும் சர்வதேச நீதி விசாரணையை  எமது அரசியல் இயக்கம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றது.

சிறீலங்காவின் அரச கட்டமைப்பு, நீதி கோரும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களையும் அதற்காகக் குரல் கொடுத்த சட்டத்தரணிகளையும் அச்சுறுத்தி வந்ததன் தொடர்ச்சியாக இன்று நீதிபதிக்கே அச்சுறுத்தல் விடுத்து தீர்ப்பை மாற்றக் கோரும் அளவுக்கு மோசமாகச் செயற்பட்டிருக்கிறது.

இந்த மோசமான நிலைமைக்கு எதிராகத் தமிழ் மக்கள் எழுச்சியடைய வேண்டும். இதற்கான நீதி கோரிய போராட்டங்களில் தமிழ் மக்களைக் கலந்து கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறோம் – என்றுள்ளது.