இடைநிலை ஆசிரியர்கள் 3 நாட்களாக உண்ணாவிரதம்: 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி

163 0

ஊதிய முரண்பாட்டை களைய வலியுறுத்தி 3 நாட்களாக தொடர்உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களில் 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 2009 மே 31-ம் தேதி நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு ஊதியமும், அதே ஆண்டு ஜூன் 1-ல் பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மற்றொரு ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு நாள் வித்தியாசத்தில் அடிப்படை ஊதியத்தில் ரூ.3,170 குறைந்துள்ளது. இதனால் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த முரண்பாட்டை களைய வலியுறுத்தி கடந்த 14 ஆண்டுகளாக ஆசிரியர்கள் போராடி வருகின்றனர்.

இதையடுத்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி இடை நிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் (எஸ்எஸ்டிஏ) சார்பில் சென்னை டிபிஐ வளாகத்தில் கடந்த3 நாட்களாக தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடந்து வருகிறது. ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் தங்கள் குடும்பத்தினருடன் போராட்டத்தில் பங்கேற்றுள்ளதால் டி.பி.ஐ வளாகம் பரபரப்பாக காணப்படுகிறது. அங்கு பாதுகாப்புக்காக காவல் துறையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், முதலுதவி பணிகளுக்காக டி.பி.ஐ வளாகத்திலேயே தற்காலிகமாக மருத்துவ முகாமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாமக வடக்கு மண்டல இணைப் பொதுச் செயலாளர் ஏ.கே.மூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் இடைநிலை ஆசிரியர்களை நேரில் சந்தித்து தங்கள் கட்சியின் ஆதரவை தெரிவித்தனர்.

இதற்கிடையே, டிபிஐ வளாகத்தின் மற்றொரு பகுதியில் பணி நிரந்தரம் கோரி தமிழக பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சங்கம் மற்றும் ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள் சங்கத்தைச் சேர்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களும், டெட் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வழங்குதல் உட்பட கோரிக்கைகளை முன்வைத்து 2013-ம் ஆண்டு டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சென்னையில் அவ்வப்போது மழை பெய்து வந்தாலும் அவர்கள் போராட்டத்தை கை விடாமல் தொடர்கின்றனர். இந்நிலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டிஎன் பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் காத்திருப்பு போராட்டம் டிபிஐ வளாகத்தில் இன்று (அக்.1) முதல் தொடங்கப்பட உள்ளது. காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் அக்.3-ம் தேதி திறக்கப்பட உள்ள சூழலில், பல்வேறு ஆசிரியர் சங்கங்களின் போராட்டங்கள் பள்ளிக் கல்வித் துறைக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளதாகக் கூறப்படுகிறது.