உத்தேச நிகழ்நிலைக்காப்புச் சட்டமூலம் தற்போதைய வடிவத்தில் நிறைவேற்றப்படின் கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரம் பாதிக்கப்படும்

132 0

உத்தேச நிகழ்நிலைக்காப்புச் சட்டமூலம் தற்போதைய வடிவத்திலேயே பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால், அது கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை வெகுவாகப் பாதிக்கும் என்பதுடன் ஏற்கனவே நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள சிவில் செயற்பாடுகளுக்கான இடைவெளியை மேலும் சுருக்கமடையச்செய்யும் என சர்வதேச ஜுரர்கள் ஆணைக்குழு எச்சரித்துள்ளது.

அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள உத்தேச நிகழ்நிலைக்காப்புச் சட்டமூலமானது கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரம் உள்ளடங்கலாக மனித உரிமைகள் மீது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும், எனவே அச்சட்டமூலம் உடனடியாக வாபஸ் பெறப்படவேண்டும் எனவும் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்திவரும் நிலையில், நிகழ்நிலைக்காப்புச் சட்டமூலம் எதிர்வரும் செவ்வாய்கிழமை (3) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இவ்வாறானதொரு பின்னணியில் இச்சட்டமூலத்தின் பாரதூரத்தன்மை தொடர்பில் சர்வதேச ஜுரர்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

பொதுமக்கள் உள்ளடங்கலாக சகல தரப்பினரதும் நிகழ்நிலை தொடர்பாடலை ஒழுங்குபடுத்தும் நோக்கில் தயாரிக்கப்பட்டுள்ள ‘நிகழ்நிலைக்காப்புச் சட்டமூலம்’ கடந்த செப்டெம்பர் மாதம் 18 ஆம் திகதி பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சினால் வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.

அச்சட்டமூலத்தின் சில சரத்துக்கள் தகவல்களை அறிதல் மற்றும் கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரம் உள்ளடங்கலாக அடிப்படை சுதந்திரங்களையும் மனித உரிமைகளையும் அனுபவிப்பதில் பாதிப்பை ஏற்படுத்துமென நாம் கருதுகின்றோம். குறிப்பாக இச்சட்டமூலத்தின் பிரகாரம் உருவாக்குவதற்கு உத்தேசிக்கப்படும் நிகழ்நிலைக்காப்பு ஆணைக்குழுவின் செயற்பாடுகள் மற்றும் நியமனங்களும், தண்டனைக்குரிய குற்றங்களாக வரையறுக்கப்பட்டிருப்பவற்றின் பரந்துபட்ட தன்மையும் மிகுந்த கரிசனைக்குரிய விடயங்களாகக் காணப்படுகின்றன.

நிகழ்நிலையிலான வெறுப்புணர்வுப்பேச்சுக்கள் மற்றும் தவறான தகவல்கள் போன்றவற்றின் பரவலை உரியவாறு கையாளவேண்டிய அவசியம் காணப்படினும், இச்சட்டமூலமானது ஏற்கனவே கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற்குத் தவறியிருக்கும் இலங்கை அரசாங்கம் மேலும் மீறல்களில் ஈடுபடுவதற்கு இடமளிக்கின்றது. குறிப்பாக அரசாங்கம் மற்றும் அரச கொள்கையுடன் தொடர்புடைய முக்கிய பொது விவாதங்கள் மீது அடக்குமுறைகள் பிரயோகிக்கப்படக்கூடிய அச்சுறுத்தலை இது தோற்றுவித்துள்ளது.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கமானது உத்தேச நிகழ்நிலைக்காப்புச் சட்டமூலம் உடனடியாக வாபஸ் பெறப்படவேண்டுமென ஏற்கனவே வலியுறுத்தியிருப்பதுடன், பரந்துபட்ட சமூகத்தின்மீது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சட்டமூலங்களை வர்த்தமானியில் வெளியிடுவதற்கு முன்பதாக அதுபற்றி சம்பந்தப்பட்ட சகல தரப்பினருடனும் அர்த்தமுள்ள கலந்துரையாடல்கள் முன்னெடுக்கவேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டியிருக்கின்றது.

அதன்படி இச்சட்டமூலமானது உரிமைகளை மட்டுப்படுத்தக்கூடிய எந்தவொரு அரச நடவடிக்கையின்போதும் பின்பற்றப்படவேண்டிய அவசியத்தன்மை, சட்டபூர்வத்தன்மை ஆகிய கோட்பாடுகளைப் பூர்த்திசெய்யத் தவறியிருக்கின்றது. எனவே இச்சட்டமூலம் முழுமையாக வாபஸ் பெறப்படவேண்டும். இல்லாவிடின் கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரம், தகவல் சுதந்திரம் ஆகியவற்றைப் பாதுகாப்பதை முன்னிறுத்தி இலங்கை கொண்டிருக்கும் சர்வதேச மனித உரிமைகள் கடப்பாடுகளுக்கு அமைவாக இச்சட்டமூலம் திருத்தியமைக்கப்படவேண்டும் என்று அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.